Tuesday, October 7, 2014

அறிவிலோங்கி இவ்வையம் தழைக்க..

நன்றி: பாவையர் மலர்


“காடா கொன்றோ நாடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர் 
அவ்வழி நல்லைவாழிய நிலனே” 

என்னும் புறநானூற்றுப் பாடல் மக்களின் தன்மையை, உணர்வை முதன்மைப்படுத்திப் பேசும் ஒரு பாடல். ஆணோ, பெண்ணோ மண்ணில் நல்ல வண்ணம் வாழும் வகையில் அமைந்திருக்கும் சமூகமே நல்ல நிலமாகக் கருதப்படும். பெண்கள் வாழப் பாதுகாப்பான நாடுகள் என்று அண்மையில் எடுத்த கணக்கீடு ஒன்றில் இந்தியா 161 ஆவது இடத்தில் இருப்பதே அந்நிலத்தின் பாதுகாப்பின்மையைச் சொல்லும்.

ஒவ்வொரு நாளும் பாலியல் வன்முறையால் வதைபடும், மரணிக்கும் பெண்கள், குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கை நாம் அறியக்கூடுவதில்லை. அது கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை. சமூகத்தின் சிறிய அலகான குடும்பத்தில் பெண் எப்படிப் பொருட்படுத்தத்தக்கவளாக இல்லையோ, அதையே பெருஞ்சமூகமும் நடைமுறைப்படுத்துகிறது. ஆனால், தடைகளைத் தாண்டி, அவள் முன்னேறும் இவ்வேளையில் தன் உடல், அதன் சுதந்திரம், தடைகள், சமூகம் பெண்ணுடலின்மீது விதிக்கும் கட்டுப்பாடுகள் பற்றிய அறிவும் ஆணுக்குக் கிடைக்கும் தடையற்ற சுதந்திரம், அவனுக்குப் புகட்டப்படும் பெண்ணுடல் பற்றிய பார்வை பற்றியும் ஆண், பெண் இருபாலருமே அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதுவே ஒரு பாதுகாப்பான, ஆணும் பெண்ணும் நிகரென வாழும் நிலத்தை அமைக்க முடியும்.

பெண் மீதான வன்முறை குடும்பம், வெளி என இரண்டு இடங்களிலிருந்தும் நிகழ்கிறது. அது பெரும்பாலும் வெளிப்படுவதேயில்லை; வெளிப்படினும், அப்பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களும் கேள்விகளும் முற்றுமாக அவளை முடக்கிப் போடுவதாகவே உள்ளது. டிசம்பர் 2012 இல் தில்லியில் ஒரு 23 வயதுள்ள மருத்துவம் படிக்கும் மாணவியொருத்தி ஒரு தனியார் வாடகைப் பேருந்தில் ஆறு ஆண்களால் வன்புணர்வு செய்யப்பட்டாள். அந்த ஆண்கள் ஓர் இரும்புக் கம்பியால் அவளது பிறப்புறுப்பிலும் குடலிலும் ஏற்படுத்திய காயங்களால் பத்து நாட்கள் மருத்துவமனையில் நரகவேதனைப்பட்டுப் பின் உயிரிழந்தாள். அடுத்த சில நாட்களில் எட்டாவது படித்துக்கொண்டிருந்த மாணவி, பள்ளிக்குச் செல்லும் வழியில் குடிபோதையில் இருந்த ஒருவனால் வன்புணர்வு செய்யப்பட்டு, புதர்மறைவில் அவளுடைய உடலிருந்த செய்தி நாளிதழில் படிக்கக் கிடைத்தது. ஐந்து வயதுச் சிறுமி அவரது வீட்டருகில் வசித்த 23 வயதுடைய ஒருவனால் கடத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டது ஏப்ரல் 2013 இல் நடந்தது. மருத்துவமனைத் தகவலின்படி ஒரு பிளாஸ்டிக் பாட்டிலும் மெழுகுவத்தியும் அந்தக் குழந்தையின் பிறப்புறுப்பில் திணித்து நுழைக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சம்பவங்கள் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படும்போது, அரசு மேலும் சில சட்டங்களை இயற்றும்; அல்லது செயல்படுத்தப்படாமலிருக்கும் சட்டங்கள் மூலம் சிலருக்குத் தண்டனை வழங்கி, சட்டம் - ஒழுங்கு இன்னும் உயிருடன் இருப்பதாக ஒரு பாவனை காட்டும். சட்டம்போட்டு யாரையும் திருத்திட முடியாதென்பதை நாமறிவோம். பதிவாகும் குற்றங்களே மிகக் குறைவு; நம் மனஅமைப்பு அப்படி. பதிவாகும் குற்றங்களிலும் கூட, அந்தப் பெண்ணே குற்றம் சாட்டப்படுவாள்; இழிவாகப் பார்க்கப்படுவாள்; வாழ்வை இழந்து பலியாவாளேயன்றி வேறெதுவும் ஆகப்போவதில்லை. உதாரணமாக, சென்ற வருடம் 21,093 குற்றங்கள் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எண்ணிக்கையில் பார்த்தால் நடப்பை விடவும் பதிவு மிகக் குறைவு. அதிலும் கூட 4072 குற்றங்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. 11351 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன அல்லது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. மற்றவை இன்னும் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நாம்  பாலியல் வன்முறைக்கான அடிப்படைக் காரணத்தை ஆராயாமல், தொடர்ணந்து அதனை மூடி மறைப்பதையோ, நடக்கும்போது உடன் எதிர்வினையாற்றுவதையோ மட்டுமே செய்து வருகிறோம். அரசும்கூட அப்போதைக்குக் கிடைக்கும் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை கொடுத்து, பொதுச்சமூகத்தின் மனசாட்சியைத் திருப்திப்படுத்த முனைகிறதேயன்றி, மாற்றத்துக்கான எந்த முன்முயற்சியையும் எடுப்பதில்லை. கல்வியில் பின் தங்கியிருக்கும் பெண்களும் அவர்களின் சார்ந்திருக்கும் கீழ்நிலையும் ஆண்மையச் சமுதாயத்தின் ஆணாதிக்கப் பண்புமே முதன்மைக் காரணம். வாய்ப்புக் கிடைக்குமிடத்திலெல்லாம் பெண்களின் சமூக நிலையை மேம்படுத்தவும் பெண்களுக்குச் சம அதிகாரம் தரும் வகையிலுமான செயல்பாடுகளை அரசும் பெண் சார்ந்த இயக்கங்களும் ஆணையங்களும் முன்னெடுக்க வேண்டும். இளம்பருவத்திலேயே கல்வியிலேயே அந்த அறிவைப் புகட்டுவதே எளிதாகவும் காத்திரமானதாகவும் அமையும். பாலியல் வன்முறை பற்றிப் பேசும்போதே, அதற்குள் இருந்து வினையாற்றும் சாதி, பொருளாதாரம், மதம் ஆகியவற்றைப் பற்றியும் பேசியாக வேண்டும்.

குழந்தைப் பருவத்திலிருந்தே சமூகம் பெண்ணுக்கு அவள் எப்படி இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதைப் புகட்டியபடியே இருக்கிறது, மரணத்தருவாய் வ்ரையிலும். பெண், தன் உடைகளில் கவனமாக இருக்க வேண்டும்; இரவு வேளைக்கு முன்னால் வீடு திரும்ப வேண்டும்; அவள் எப்போதும் தன் நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும் போன்று பல எல்லைக்கோடுகள் அவள் உடலைக் குறுக்கும்நெடுக்குமாய்க் கண்ணுக்குத் தெரியாமல் பிணைத்திருக்கின்றன. அவள் அதை மீறும்போதெல்லாம் வன்மையாகக் கண்டிக்கப்படுகிறாள்; காரணமாக்கப்படுகின்றாள்.
அதே சமூகம், ஆண் குழந்தைகளையும் சிறு வயது முதலே, நீ ஆண்; கண்கலங்கக் கூடாது; பெண் உன் சொத்து, அவளைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை; பெண்ணுடல் கவர்ச்சியானது, காமத்தைத் தூண்டக்கூடியது; அவள் உனக்கு அடங்கி இருக்க வேண்டியவள் என்பதையும் கற்பித்து மனத்தின் அடியாழத்தில் பதித்துவிடுகிறது. பெண்ணுடலை மையப்படுத்திய இத்தகைய ஆணாதிக்கக் கருத்தியல்களைப் பல பெண்களே நம்பும், பேசும் சூழலுமே இருக்கிறது. பெண்ணுக்கு, ஒரு புறம் கடவுள் தன்மையும் மற்றொரு புறம் அவளைக் காமப் பண்டமாகப் பார்ப்பதும் அதை வணிகமாக்குவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஒரு பெண் பிக்குணியை வழிமறித்து ஆணொருவன் பாலியல் கண்ணோட்டத்தில் அணுகிய நிகழ்ச்சிக்குப் பின், புத்தர், பெண் பிக்குணிகள் தனியாய் வழிகளில் செல்வதும் உறங்குவதும் கூடாது என்று விதிமுறைப்படுத்தினார் (Old Path White Clouds, Thich Nhat Hanh (2011) என்று கட்டுரையொன்றில் கு. அழகர்சாமி என்பவர் குறிப்பிடுகின்றார். 

பெண் குழந்தைகள் வளர வளர அவர்கள் அணியும் உடைகள் கட்டுப்படுத்தப்படுவதும் அவளுடைய செயல்பாடுகள் வரையறுக்கப்படுவதுமே இன்று வரையிலும் தொடர்வதும் அப்படியான சூழலிலும் கூட அவள் பாதுகாப்பற்றே ஒவ்வொரு நாளும் வன்முறையைச் சந்தித்து வருகிறாள் என்பதுமே பாலியல் கல்வியின் தேவையை வலியுறுத்துகிறது. பாலியல் கல்வியில் இருக்க வேண்டிய கருத்தியல்களை நாம் இப்படிப் பார்க்கலாம் பெண், ஆணுடல்களை அறிதல், உடலின் செயல்பாடுகள், உணர்வுரீதியான வேறுபாடுகள், தன் உடல் மீதான உரிமை, சமூகம் அவ்வுடல் மேல் திணிக்கும் கருத்துகள், அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் இப்படி அமைத்துக்கொண்டோமானால் சமத்துவமான சமுதாயத்தைப் பற்றி நாம் கனவு காணலாம்.

குடும்பம், சாதி, மதம், ஊடகம் வாயிலாக பெண்ணுடல் வரையறுக்கப்படுகிறது; இழிவாகவும் அருவருப்பாகவும் காட்டப்படுகிறது; வணிகப் பொருளாக, போக நுகர்வாக அறிமுகப்படுத்தப்படுகிறது. தான் கவர்ச்சிகரமானவள் என்று நம்பும் பெண் குழந்தை தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் அழகைக் கூட்டுவதிலும் கவனம் செலுத்தி, அறிவுப் பாதையை விட்டு விலகி விடுகிறது. பெண் கவர்ச்சியானவள் என்று அறிவுறுத்தப்படும் ஆண் குழந்தை அவளை போகமாகவும் காமமாகவும் அடிமையாகவும் பார்க்கத் தொடங்குகிறது. பெண் சார்ந்த வன்முறைகளுக்கு ஊற்றுக்கண் இதுவே. இதனை மாற்றாமல் இந்தச் சிக்கல் தீரவே தீராது. இதைத்தான் இன்றைய பள்ளிக் குழந்தைகளிடம் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். பெண் குழந்தைகள் கல்வி பயில வரும் இடத்தின் அடிப்படைக்கு மாறாகத் தன்னை அதீதமாக அலங்கரித்து வருவதும் அப்படி வருபவளை மாணவர்கள் இச்சைக்குரியவளாகக் கவனிப்பதும் அவளைக் கவர முயற்சிப்பதுமான இந்த நிகழ்வுகளில் பெண்ணே குற்றவாளியாக்கப்படுகின்றாள்; கண்டிக்கப்படுகின்றாள்.

டெல்லியில் நடந்த பாலியல் வன்புணர்விலும் வினோதினி விஷயத்திலும் இப்படி நடக்கும் பல சம்பவங்களில் குற்றம் கண்டிக்கப்பட்டாலும் கூட அந்தப் பெண்ணுக்கு இரவு 9 மணிக்குமேல் வெளியில் என்ன வேலை? ஆண் நண்பருடன் அவள் ஏன் வெளியில் செல்ல வேண்டும்? அவள் ஏன் ஆபாசமாக உடை அணிகிறாள்? ஆண்களைத் தூண்டுகிறாள்? வினோதினி அந்த ஆணை ஏமாற்றினார் தானே போன்ற பதிவுகளே மிக அதிகமாக ஊடகங்கள்வழி கிடைக்கின்றன. இதுவே சமூகத்தின் பொதுப்புத்தி. ஒரு பெண் தன் உடல்முழுவதும் நகை அணிந்து நள்ளிரவில் தெருவில் தனியாக நடக்கும்போதே உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக நம்புவேன் என்று காந்தியடிகள் சொன்னது இன்னமும் சாத்தியப்படாத சூழலில், அவளுடலில் நகைகள் இருக்க வேண்டிய அவசியமில்லை; சாதாரணமாகக்கூட அவள் நடக்க முடியாத காலத்தில்தான் இன்றும் நாம் வாழ்கிறோம். அதனை மாற்றவே பாலியல் கல்வி குறித்தும் வலியுறுத்துகிறோம். ஏமாற்றும் ஆண், பெண்ணுக்கெல்லாம் ஆசிட் வீச்சு தண்டனைதான் என்று நாம் நியாயப்படுத்தினால், இன்று பலருக்கும் வெந்தமுகம்தான் அடையாளமாக இருக்கும். பெண்ணின் உடல் கவர்ச்சிதான் காரணம் என்று குற்றம் சாட்டும் அடிப்படைவாதிகள், சீருடையில் செல்லும் சிறு குழந்தைகளும் ஓரிரு வயதுக் குழந்தைகளும் கூடப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது ஏன் என்ற கேள்விகளைத் தங்களுக்குள்ளாவது கேட்டுக்கொள்ள வேண்டும். சிறு குழந்தையின் பாலியல் உறுப்பு ஒருவனுடைய காமத்தைத் தூண்டுகிறது என்றால், நாம் கற்றதும் பெற்றதும் என்ன?

2011இல் புகார் செய்யப்பட்ட 24,206 பாலியல் வன்புணர்வுக் குற்றங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை வீதம் 3.6% 10 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை 7% என்று தேசீயக் குற்றப் பதிவு பீரோவின் அறிக்கையொன்று கூறுகிறது. பெண்ணுடல் என்பதே ஆளப்படவேண்டியவொன்று என்று ஆணாதிக்கச்சமூகம் கட்டமைத்திருக்கும் பிரக்ஞையே இதன் அடிச்சரடு. இதற்குப் பெண்களைக் காரணமாக்குவதும் பெண் பொதுவெளிக்கு வருவதைக் குற்றம் சாட்டுவதும் உண்மையை மூடி மறைக்கும் உத்தி. தன் உடல் பற்றிய அறிவற்ற பெண்களும் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகி விடுகின்றனர்.  ஊடகங்களும் திரைப்படங்களும் தொடர்ந்தது பெண்ணுடலைப் பண்டப்படுததுவதை உணராமல், அதன் பாதையிலேயே பயணிக்கின்றனர். தன்னுடலைப் பாதுகாத்துக்கொள்ளத் தெரியாமல் கதாநாயகனின் உதவியை நாடும், குளிர்ப்பிரதேசத்தில் கூடக் குறைவான உடையணிவிக்கப்படும் கதாநாயகியை எந்தக் கேள்வியுமின்றி வெகு இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் பெண்கள் பலர் தானும் அதுவாகப் பாவித்து, அப்பண்புகளையே தங்கள் பண்பாய் ஏற்றுக்கொண்டு ஆணின் கடைப்பார்வைக்குக் காத்திருந்து இரையாகிறார்கள். 

பெண்ணுக்கு இத்தகைய வன்முறைகள், பொதுவெளியில் மட்டும்தான் நிகழ்கிறது என்று நாம் நினைத்தோமானால், அது பூனை கண்ணை மூடிக்கொள்ளும் கதையே. எத்தனை வன்மத்தைப் பெண் வெளியில் சந்திக்கிறாளோ, அதற்குச் சற்றும் குறையாமல் பாதுகாப்பான இடமென்று சொல்லப்படும் வீட்டில் உறவுகளிடமிருந்தும் பள்ளியில் ஆசிரியர்களிடமிருந்தும் கூடச் சந்திக்க நேர்கிறது. படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் சிதறக் கூடாது என்றும் தொலைத்தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். குழந்தைகள் இச்சாதனங்களை மிகுதியாகவும் பயன்படுத்துகின்றனர் என்பதும் அதில் சில சிக்கல்கள் இருப்பதும் உண்மை. ஆனால், அவர்களைப் பயன்படுத்தாமல் தடுக்க முடியாது மாறாக பாதுகாப்பாக எப்படிப் பயன்படுத்துவது என்பதைத்தான் நாம் கற்றுத்தர முயற்சிக்க வேண்டும். 
பாலியல் கல்வி என்பது உடல் சார்ந்தது; அதைப் பாடத்திட்டத்தில் சேர்த்தால் மாணவர்கள் கெட்டுப் போவார்கள் என்னும் மக்களின் பொதுப்புத்தி சார்ந்த கருத்தை மாற்ற அரசு தன்னாலான முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும். அதற்குப் பிற இயக்கங்களின் உதவிகளையும் கூட நாடலாம். உடல் சார்ந்து மட்டுமல்லாமல் உணர்வு, உரிமை சார்ந்த விஷயங்களும் பேசப்பட வேண்டும். மேலும் இக்கல்விக்குத் தொடர்புடைய பயிற்சிகளைப் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் கூட அளிக்க வேண்டும். உண்மையில், அவர்களுக்குத்தான் இது அதிகமும் தேவை. அரைகுறை அறிவுடனும் தெளிவற்ற சிந்தனையோடும் அவர்கள் மாணவர்களை அணுகினால் எதிர்மறையான விளைவுகளே மிகும். அதிகமான அலங்காரத்துடனும் தலையலங்காரத்துடனும் பள்ளிக்கு வந்த ஒரு மாணவியை ஆசிரியர், “இப்படியே நீ இருந்தா, சீக்கிரம் எவன் கூடயாவது ஓடித்தான் போவே. ஒழுங்காப் படிச்சு முன்னேர்ற வழியப் பாரு” என்று திட்டிக்கொண்டிருந்ததைக் கேட்டு வருத்தப்பட்ட சம்பவமும் உண்டு. உண்மையில், அந்த மாணவி நன்றாகப் படித்து முன்னேற வேண்டுமென்று ஆசிரியர் நினைக்கிறாரெனில், இப்படிப்பட்ட மாணவிகளை மென்மையாகவும் கவனமாகவுமே கையாளவேண்டும். அன்றி நாம் எதிர்பார்க்கும் விளைவுகள் கிடைக்காது. பெற்றோரும் ஆசிரியர்களும் இப்படி வசைபாடும்போது இத்தகைய எளிய மனம் படைத்த, புரிதல் இல்லாத மாணவிகள் தவறான திசையில் வழிதவறிச் சென்று ஏமாந்து போகிறார்கள். நம் அன்பு, காப்புணர்ச்சி ஆகியவற்றின் மூலமே அவர்களைக் காக்க முடியும்.

வீட்டிலும் பெற்றோர் நல்ல நண்பர்களாக இருக்கும்போது மட்டுமே குழந்தைகள் மனம் விட்டுப் பேச முடியும். தனக்கு நேர்வதை வெளிப்படையாகப் பேசும் குழந்தைகளை நம்மால் காப்பாற்ற முடியும். சமூகத்தின் வக்கிரத்துக்கும் பலியாகி, அதைத்தன் பெற்றோரிடமும் சொல்ல முடியாமல் சுருங்கும் குழந்தைகள் பின் எப்படி மலர முடியும்? குழந்தைகளுடன் புழங்கும் ஒவ்வொருவரும் தாமும் இவ்வயதைக் கடந்தவர் என்பதை நினைவில் கொண்டு, அவ்வயதில் ஏற்படும் சலனத்தை அறிவின் துணை கொண்டு கடக்க வேண்டும். மனத்தில் ஏற்படும் பதின்பருவக் கிளர்ச்சிகளை நேர்மறையாய் மடை மாற்ற வேண்டும். ஆண்குழந்தைகளுக்குத் தான் ஆண் என்ற பிம்பத்தைச் செதுக்காமலும் ஆண்வேலை பெண்வேலை என்னும் பிரிவினையை உணர்த்தாமலும் வளர்த்தல் நலம். 

ஆண், பெண்களுக்கான தனித்தனிப் பள்ளிகளை மெல்ல மெல்ல அகற்றி, இரு பாலரும் கலந்து படிக்கும் பள்ளிகளைக் கொணரும்போது, பாலியல் கவர்ச்சி இன்றி நல்ல நண்பர்களாய்ப் பழகும் தன்மை மேலோங்கும். பெண்களை மதிக்கின்ற, பாலியல் பண்டமாகப் பார்க்காத, வன்முறையைப் பிரயோகிக்காத ஆணாய்த் தன் பிள்ளை வளர வேண்டுமென்று ஒவ்வொரு பெற்றோரும் உறுதி பூண வேண்டும்.

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ்வையம் தழைக்குமாம்”

என்று பாரதி பாடி நெடுநாட்கள் கடந்து விட்டன. அதை நனவாக்க நம்மாலான முயற்சிகளைச் செய்வோம்.

- தி.பரமேசுவரி

காளான் காதல்களும் பிஸ்ஸாக் காதல்களும்

நன்றி : பாவையர் மலர்

இயக்குநர் சேரனுடைய மகள் தாமினி தன் காதலனுடன் செல்லப்போவதாகச் சொல்ல, பெற்றோரின் உணர்வு நிலையில் நின்று சேரன் தம்பதியர் மறுத்துப் பேச ஒளி, அச்சு ஊடகங்கள் வழியே கடந்த சில நாட்களாக இந்த உணர்ச்சிப் போராட்டத்தை மக்களும் பொறுப்பான எழுத்தாளர்கள் உள்ளிட்ட பொது வாழ்வில் உள்ளோரும் ஒவ்வொரு விதமாய்க் கருத்து சொல்லிக் கடந்தனர். இதற்கிடையில் சேரன் மகள் தன் பெற்றோருடன் திரும்பிச் செல்வதாக நீதிமன்றத்தில் கூற, வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. இதுபற்றியும் இப்போது சமூக வலைத்தளங்களிலும் பிற இடங்களிலும் அவரவர் கருத்தை விளம்பியபடி மக்கள் ஊர்ந்து கொண்டிருக்கின்றனர். மற்றொரு சிக்கல் எழும் வரை இது தொடரும்.

அதற்கும் சற்று முன்னால் இரு வேறு சாதிகளைச் சார்ந்த திவ்யா - இளவரசன் இருவருடைய காதலை ஏற்காத தன்மையினால் ஊரே இரண்டுபட்டு, தலித் மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டதும் காதலர்கள் ஊர் ஊராகத் திரிந்து இறுதியில் தங்கள் ஊருக்கே வந்து சேர்ந்து சாதிய வன்மத்தின் கரங்களில் சிக்கி வாழ்வை இழந்ததையும் கூட நாம் தினமும் கவனித்து, விளக்கங்கள் பேசி, வியாக்கியானங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தோமே தவிர உருப்படியாய் ஏதும் செய்தோமில்லை. அவர்களுடைய காதல் சாதீய விவகாரமாக மட்டுமே பார்க்கப்பட்டதேயன்றி அவர்களுடைய மாணவப் பருவம், கல்வியை முடிக்காத நிலை பற்றி ஒருவரும் சிந்திக்கவில்லை.

ஒவ்வொரு வருடமும் நண்பர்கள் மூலமாகவும் நான் பணிபுரியும் பள்ளியிலும் என மாணவப் பருவத்தில் வளரிளம்பருவத்தினர் சந்திக்கக்கூடிய பாலியல் சார்ந்த சிக்கல்களை அவதானித்தே வருகிறேன். பத்து நாட்களுக்குள்ளேயே சுற்றுப்புறத்தைச் சார்ந்த  பள்ளிகளில் இருந்து மூன்று மாணவிகள் வீட்டைவிட்டு ஓடிச் சென்ற செய்தி தெரிந்தபோது மிக வருத்தமாக இருந்தது. 9 ஆம் வகுப்பு மாணவிகள். அவர்கள் வாழும் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர், பள்ளியின் எதிரே கடை வைத்திருப்பவர் இப்படி அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அறிமுகமாகக்கூடிய, அண்மையில் வசிக்கக்கூடிய ஆண்களுடன் பழகி, ஈர்க்கப்பட்டு அந்த ஈர்ப்பு எதன் காரணமாக ஏற்பட்டதென்று சிந்திக்காமலே தங்கள் தெய்வீகக் காதலை வாழவைக்க எதற்கும் துணிகிறார்கள். பெரும்பாலும் தங்கள் வாழ்வை இழந்தும் மனத்தளவில் சிதைந்தும் திரும்பி வருகிறார்கள். மேற்சொன்ன பெண்களில், ஒருத்தி இன்னும் ஊர் திரும்பவேயில்லை. மற்றொருத்தி காதலனின் கையில் பணம் இருந்த வரையில் ஓரிரு நாட்கள் வெளியூரில் தங்கியிருந்தனர். பணம் தீர்ந்தபோது அவளைக் கொண்டுவந்து அவளுடைய வீட்டு வாசலில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டானாம். அடுத்தவளுடைய பெற்றோர் அவளைத் தேடிக் கண்டுபிடித்து, அடித்து, மீண்டும் பள்ளியிலேயே சேர்த்துள்ளார்கள். ஆனால் அவளால் மனமொன்றிப் படிக்க முடியவில்லை; பள்ளியில் மற்ற மாணவிகளிடம் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறாள்.

கல்லூரிப் பருவத்தில் காதல் மாயங்கள் நிகழ்ந்ததுபோய், 12 ஆம் வகுப்புக்கானதாக மாறி, இப்போது நகர்ந்து நகர்ந்து 9 ஆம் வகுப்பில் வந்து நிற்கிறது. நான் பணியில் சேர்ந்த புதிதில், எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 12 ஆம் வகுப்பு மாணவனும் மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். பல முறை அழைத்துப் பேசியும் கூடத் தம் காதலில் உறுதியாக இருந்து, இறுதித் தேர்வினை எழுதிவிட்டுக் கிளம்பிவிட்டனர். செய்தி தெரிந்தபோது வருத்தமாக இருந்தாலும், ‘பரவாயில்லை, தேர்வு எழுதிவிட்டுப் போனார்களே’ என்று நினைத்துக்கொண்டேன். அவன் மிக நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன்; காதலில் விழுந்தபிறகு மெல்ல மெல்ல தேர்ச்சித் தரத்தில் பின் தங்கிப் போனான். தேர்வில் இருவருமே தோல்வியுற்றனர். வீட்டிலிருந்து இரு சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள்; வழியில் நிகழ்ந்த விபத்தில் சிறு காயங்களோடு தப்பியும் வீட்டுக்குத் தகவல்போய், பெண்ணை அழைத்துச் சென்று வேறு ஒருவருக்குத் திருமணமும் செய்து வைத்துவிட்டனர். வேறு ஒரு வேலையாக அந்த ஊருக்குச் சென்றபோது அந்த மாணவனை, ஊரின் பேருந்து நிலையத்தில் தலைமுடி அலங்கோலத்தோடு சந்தித்தபோது, அவனைப் பெற்றவள் பார்த்தால் எவ்வளவு துடித்துப் போவாளோ அவ்வளவு துடித்துப் போனேன்.

பொறியியல் கல்லூரியில் படித்து வந்த வினோதினியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய வழக்கு பற்றியும் நாம் செய்தித்தாள்களில் படித்திருப்போம். அதேபோல் வேறு சில சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதையும் கவனித்தே வருகிறோம். ‘தனக்குக் கிடைக்காத “பொருள்” அடுத்தவனுக்கும் கிடைக்கக்கூடாது’ என்ற வெறியும் சீரற்ற எண்ணங்களும் மரபு கட்டமைத்துள்ள ஆதிமனத்தின் பால்பேதங்களுமே இத்தகைய சிந்தனைகளைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு வேறு சிக்கல்கள் ஊடாடினாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே. ஒன்று, இளம்வயதில் ஏற்படும் காதலில், அது பாலியல் ஈர்ப்பு மட்டுமா அல்லது இரண்டு உள்ளங்களின் இணைவா என்ற அறிவு இன்றி உடல் கவர்ச்சியை நம்பி அதற்குள் பயணித்துப் பின் பற்பல சிக்கல்களில் உழன்று வாழ்வை இழத்தல். மற்றொன்று, ஒரு தலைக் காதல் என்ற பெயரில் பெண்களைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து, ஒரு கட்டத்தில் அவர்களுடைய உயிருக்கே ஆபத்து விளைவித்தல்.

ஒவ்வொரு காலத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இல்லை; இன்னும் சொல்லப்போனால், “இதற்காகத்தான் பெண்கள் படிக்க வேண்டிய அவசியமில்லையென்று அந்தக்காலத்திலேயே சரியாகத்தான் சொல்லி இருந்தாங்க டீச்சர். இவங்க வீட்டு வாசப்படி தாண்டி வெளியே வந்து படிக்க ஆரம்பிச்சாங்க; ஆம்பளைப் பசங்களும் கெட்டுக் குட்டிச்சுவராயிடுச்சுங்க” என்று ஒரு மாணவியின் தாயார் என்னிடம் சொன்னபோது துடித்துப் போனேன். இந்தச் சிக்கல் எல்லா இடத்திலும் இருந்தாலும் நகரத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்குப் பெற்றோரின் கவனமும் வழிகாட்டுதலும் ஓரளவுக்காவது கிடைக்கத்தான் செய்கிறது. அந்த விகிதத்தில் பார்க்கும்போது கிராமத்தில் உள்ள பெற்றோருக்கே அந்த விழிப்புணர்வு இல்லை என்பது பெரும் சோகமே. மாணவிகளின் தாய்மார் பெரும்பாலானோர் அவர்களே மாணவிகளைப் போல் இருப்பதை அவர்களிடம் கிண்டல் செய்தபோது கிடைத்த தகவல் சோகமானது. பலரும் தங்கள் கல்விப் பருவத்தில் காதலில் சிக்கி, திருமணம் செய்து படிப்பை இழந்து, சிறு வயதிலேயே குழந்தையையும் பெற்று, தங்கள் பிள்ளை இப்படிச் சீரழியக்கூடாது என்று நினைப்பவர்களாக இருப்பதை அறிந்தபோது பெரும் துயரம் சூழ்ந்தது.

இப்படிச் சொன்னாலும் தங்கள் குழந்தைகளிடம் இளம்பருவத்தில் ஏற்படும் உளச் சிக்கல்களைப் பற்றி விவாதிக்கும் ஆற்றலோ, நேரமோ, ஆர்வமோ இன்றிப் பொருள் தேடி அலையும் கிராமத்துப் பெற்றோர், இப்படியொரு சிக்கலை அவர்கள் சந்திக்கும் வேளையில் அடித்துக் கொல்வதும் அழுவதும் ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்துப் பரப்புவதுமாக, பிரச்சனையைப் பெரிதாக்கி மேலும் துன்பத்தைக் கூட்டுவதன்றி அங்கு பிஞ்சு மனங்கள் படும் பாட்டினை, அடையும் கேட்டினை எண்ணிப் பார்ப்பவரிலர். இத்தகைய உளப்பாடுகள் இன்றைய குழந்தைகள் மிக அதிகமாக அனுபவிப்பதன் காரணம் யார்? எவை? என்பது பற்றியும் நாம் இன்னும் சிந்திக்கத் தொடங்கவேயில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழும் கேள்விகளையும் கூட மரபுக் காவலர்கள் தம் கையில் வைத்திருக்கும் பண்பாட்டுக் குச்சிகளால் வாய்மூடச் செய்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் நாளை உலக மக்கள்தொகை தினமாக ஐ.நா சபை அறிவித்துக் கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆண்டு மக்கள் தொகை தினத்தை “வளரிளம் பருவக் கருவுறுதலுக்கு எதிரான விழிப்புணர்வு” என்ற கருப்பொருளுடன் அனுசரிக்க ஐ.நா முடிவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் 15 வயதிலிருந்து 19 வயதுள்ள 1.6 கோடிப் பெண்கள் ஆண்டுதோறும் வளரிளம் பருவத்திலேயே கருத்தரிப்பதாகச் சர்வதேசப் புள்ளிவிவரமொன்று தெரிவிக்கிறது. ஐ.நாவின் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் செய்தி மிகச் சோகமானதும் நாம் கவனிக்கவேண்டியதுமாகும். இந்த மகப்பேற்றின்போது இவர்களில் பலர் உடல்பலமின்றியும் தாங்கும் திறனின்றியும் இறந்து போகின்றனர். வளரிளம்பருவ மகப்பேறின்போது இறக்கும் இத்தகைய பெண்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்று தெரிவிப்பதோடு குறிப்பாக, இந்தியாவிலேயே இத்தகைய மரணங்கள் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றது. இதற்கு வறுமை, சமத்துவமின்மை போன்றவற்றோடு மிக முக்கியமாக எழுத்தறிவின்மை, பாலியல் சார்ந்த போதிய அறிவின்மை ஆகியவற்றையும் முதன்மையான காரணங்களாகக் குறிப்பிட வேண்டும். வளரிளம்பருவக் காதல், கருவுறுதல் ஆகியவற்றை வெறும் உடல்நலச் சிக்கலாக மட்டும் பார்ப்பது சரியான பார்வையாக இருக்க முடியாது.

சமீபத்தில் டெல்லியில் 15 வயதிலிருந்து 24 வயது உள்ளோரிடம் நடத்திய ஓர் ஆய்வில், வெறும் 15 சதவிகிதத்தினர் மட்டுமே பாலியல் தொடர்பான கல்வி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. பாலியல் தொடர்பான குற்றங்கள் மற்றும் வளரிளம் பருவக் கருவுறுதலுக்கான காரணங்களாக இந்த ஆய்வு, பாலியல் கல்வி மறுக்கப்படுவதையும் பாலியல் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தாத நடைமுறை வாழ்க்கையையும் காரணமாகக் கூறுகின்றது. பாலியல் பற்றிய அறிவு திருமணத்திற்குப் பிறகும்கூடப் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஏற்படுவதில்லையென்றும் இந்த ஆய்வு தெரிவிப்பது கவனிக்கத்தக்கது. இவற்றுக்கெல்லாம் தீர்வாக முறையான பாலியல் கல்வியை நடைமுறைப்படுத்துவதைச் சொல்லலாம்.

வளரிளம் பருவத்தினருக்கான பாலியல் அறிவு பற்றி இந்திய அரசு 1999 ஆம் ஆண்டே பேசத் தொடங்கியது. ஆனால் கடும் எதிர்ப்புகள் காரணமாக, அப்போது அம்முயற்சி கைவிடப்பட்டது. மட்டுமின்றி, எவ்வாறு பாடத்திட்டம் அமைப்பது, எத்தகைய பாடங்களை வைப்பது, அதன் செயல்பாடுகள் பற்றிய குழப்பங்களாலேயே இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. மக்கள்தொகைக் கல்வியோடு இணைத்துப் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியும் கூடத் தோல்வியிலேயே முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

தி. பரமேசுவரி 

Sunday, June 16, 2013

மெல்ல அழுகும் சமூகம்

நன்றி பாவையர் மலர்

காலையில் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் பள்ளிக்குக் கிளம்பி வந்து விடுகின்றனர் மாணவர்கள். அவர்கள் பெரும்பாலும் வீட்டின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் வராதவர்கள். இப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கிறதா என்று தனியார் பள்ளி மாணவர்கள் பொறாமைப்படக் கூடிய அளவுக்கு வாழ்பவர்கள். ஆனால் இதுவும் சரியா என்பது உங்கள் முன் வைக்கப்படும் கேள்வி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். காலையில் நடக்கும் சிறப்பு வகுப்புக்கு வர மாட்டார்கள். ஆனால் பள்ளி வளாகத்துக்குள்ளேயே விளையாடியபடி இருப்பார்கள். வழிபாட்டுக்கான முதல் மணி அடித்த பின்னர், நிதானமாகக் கிளம்பி, வீட்டுக்குச் சென்று குளித்தும் குளிக்காமல் புத்தகப் பையை எடுத்து வருவார்கள். வழிபாடு முடிந்து, வருகைப் பதிவேட்டையும் முடிக்கும் நேரத்தில் ஓர் அசட்டுச் சிரிப்போடு வகுப்பு வாசலில் வந்து நிற்பார்கள். அவர்களுக்கு வருகை பதியலாமா, வேண்டாமா என்பதே பெரும் சந்தேகமாக இருக்கும். மீண்டும் சில மணி நேர இடைவெளியில் பையை வகுப்பறையிலேயே வைத்துவிட்டுச் சுவரேறிக் குதித்துக் கிளம்பி விடுவார்கள். அவர்கள் திரும்ப வந்துவிட வேண்டுமே என்பதே பெரும்பாலான ஆசிரியர்களின் பிரார்த்தனையாக இருக்கும். எங்கள் பிரார்த்தனை நேரமென்பது அதுதான்.

இப்படியான சில மாணவர்களையும் இங்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இதே பூங்குழலிகளும் அபிராமிகளும் படிக்கும் பள்ளிகளில்தான் இவர்களும் படிக்கிறார்கள். இந்தப் பெண்கள் கொண்டுவரும் மதிய உணவு காலையிலேயே இவர்களால் ஸ்வாஹா செய்யப்படும். வகுப்புகள் நடைபெறும் நேரத்திலும் அவர்கள் கொண்டு வரும் வேர்க்கடலை, பிஸ்கட்டுகள், மாங்காய், மிக்சர் என வகைதொகையில்லாமல் எல்லாவற்றையும் பேரோசையுடன் நொறுக்கித் தள்ளுவார்கள். ஆசிரியர் இதைக் கண்டுகொள்ளாமல் பரப்பிரம்மமாய்ப் பாடம் எடுக்க வேண்டுமென்பது அவருடைய தலையெழுத்து. ஏனென்றால் எல்லாமே இன்றைக்கு மாணவர் நலன் கருதி நடத்தப்படுகிறது.

முன்பெல்லாம் கடைசி பென்ச் மாணவர்கள் என்றே ஓர் அணி புகழ் பெற்றிருக்கும். இப்போதெல்லாம் முதல் தொடங்கி கடைசி பென்ச் வரை ஒரே அணிதான். ஓரிரு மாணவர்களே படிக்கும் ஆர்வத்துடன் கவனிப்பவர்கள். அவர்களில் எவரேனும் ஆர்வக்கோளாறில் எழுந்து சந்தேகம் கேட்டு விட்டாலோ, தேர்வு நேரங்களில் ஒரு விடைத்தாள் அதிகம் வாங்கி விட்டாலோ தீர்ந்தார்கள். அங்கேயே கேலி பேசுவதும், தாளை வாங்கிக்கொண்டு தன் இடம் அமரும் வரை ஊளையிடுவதும் அவன் எழுதிய விடைத்தாளைக் கேட்டுத் தொந்தரவு செய்வதும் எனத் தீராத விளையாட்டுப் பிள்ளைகளாகி விடுவார்கள். பொதுத் தேர்வுகளில் கூட சில இடங்களில் இப்படித்தான் நடக்கிறது என்று சொன்னால் நம்புங்கள் நண்பர்களே..

வகுப்பறைக்குள் குடித்து விட்டு வருவது, புகை பிடிப்பது, ஆசிரியரையும் சக மாணவிகளையும் கேலி பேசுவது, அலைபேசி எடுத்துவந்து பெண்களைப் (ஆசிரியைகளையும் சேர்த்தேதான் சொல்கிறேன்) படம் எடுப்பது, காதல் கடிதம் கொடுப்பது (இதுவும் இருவருக்கும்தான்) என இவர்களின் அலப்பறை சொல்லில் அடக்க முடியாது. அவர்களின் பெற்றோரை வரவழைக்கலாமென்றால் ஒரு நாள் வேலையை விட்டு வந்தால் கூலியை இழப்போமென்ற நிலையில் இருப்பவர்கள், தங்கள் பிள்ளையை நன்கு அறிந்தவர்கள், எனவே எங்கள் கூக்குரல்களைப் பொருட்படுத்துவதேயில்லை. அப்படியே தப்பித்தவறி வந்தாலும் அவர்களுடைய கண்ணீரும் கையாலாகாத்தனமும் எங்களையே குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கும். இப்படிக் கேட்க ஆளின்றி வளரும் பெரும்பான்மை இளைய தலைமுறை திரைப்படங்களையும் ஊடகங்களின் சீரியல்களையும் பார்த்தே தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள். அவற்றுள் இருக்கும் வன்மமும் வெறியும் பழித்தலும் எள்ளலும் சற்றும் குறையாமல் உள்வாங்கிக்கொள்கிறார்கள். காட்சித் திரையின் படையெடுப்பில் வலிவிழந்து அடிமைகளாகி விடுகின்றனர். இதற்குப் பெரிய உதாரணம், பாலாஜி. 

ஹீரோ போலத் தோற்றமளிக்கும் பாலாஜியின் ஒற்றை அறை வீட்டுக்கு நான் சென்றிருக்கிறேன். பள்ளி இல்லாத நேரத்தில் அருகிலுள்ள தொழிற்சாலையில் வேலை பார்ப்பான். ஒரு நாள் முழுக்கூலி 300 ரூபாய் என்று சொல்லி இருக்கிறான். அந்தப் பணத்தில் உடற்பயிற்சிக்கூடத்துக்குச் சென்று தன் உடலை சிக்ஸ் பேக் ஆக முயற்சிப்பவன். நடிகர் சூர்யாவின் பரம ரசிகன். நீங்க புத்தகத்துல லாம் எழுதி என்ன பிரயோஜனம் டீச்சர்? சூர்யாவை நம்ம ஸ்கூலுக்குக் கூட்டிட்டு வருவீங்களா? என்று என்னை எப்போதும் கேள்வி கேட்பவன். அண்மையில் வெளிவந்த சூர்யாவின் படத்தைப் பள்ளிக்கு வராமல் முதல் நாள் முதல் காட்சிக்குப் போய் விட்டு வந்து மாலையில் நடக்கும் சிறப்பு வகுப்புக்கு நல்ல பிள்ளை போல வந்து உட்கார்ந்தான். காலையில் 9 மணியிலிருந்து பார்க்காதவனை மாலை 4 மணிக்குப் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன். ஓர் அசட்டுச் சிரிப்புடன் "சூர்யா படம் இன்னைக்கு ரிலீஸ் டீச்சர்" என்றான். தனியாகவும் அவனுடைய அம்மாவை அழைத்தும் அக்கா, மாமா எனக் குடும்பத்தையே அழைத்துப் பேசியும் அவனிடம் ஒரு மாற்றமுமில்லை. வகுப்பில் பாடம் நடக்கையிலேயே சரசரவெனும் சத்தத்துடன் பிஸ்கட்டைக் கரக் முரக் எனக் கடித்துச் சாப்பிடுவது, கொண்டுவந்த முறுக்கைத் தான் மட்டும் தின்னாத நல்லவனாய்த் தன் நண்பர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்க, வகுப்பு முழுவதும் அவர்களின் கரக் முரக். மாணவிகளின் கலீர் சிரிப்பொலி. ஆசிரியரின் சிவந்த கண்கள். இப்படியான வகுப்புகளைத்தான் திரைப்படங்கள் அவனுக்குக் காட்டுகின்றன. இவனைப் பார்க்கும் இன்னும் பல மாணவர்கள், அவனையே தங்கள் தலைவனாய் வரித்துக்கொண்டு தட்டிக் கேட்கும் ஆசிரியர்களிடம் சண்டை போடுவது, அவர்களிடம் வம்பிழுப்பது, மற்ற வகுப்புகளிலுள்ள மாணவிகளையும் கேலி செய்வது என்று அமர்க்களம் செய்வார்கள். 

விஜய், தன் படத்தில் குட்டிச் சட்டை போடுவது போலவே மாணவர்களும் கையைத் தூக்கினாலே இடுப்பு தெரியும் சட்டைகளையும் தரையில் உட்கார முடியாதபடியான டைட்டான பேண்டுகளையும் கழுத்திலும் கையிலும் விதவிதமான மணிகளையும் காதில் கடுக்கனையும் போட்டுக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். 

இதே தாக்கம் மாணவிகளிடத்திலும் பார்க்க முடியும். ஆனால், பெண்களைச் சமூகம் இன்னும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலும் அவளுக்கு இருக்கும் ஆபத்துகளாலும் ஓரளவுக்கு மேல் அவர்களால் இப்படிப்பட்ட செய்கைகளில் மனமிருந்தாலும் ஈடுபட முடிவதில்லை. மட்டுமல்லாமல், படித்தால் மட்டுமே வீட்டில் இருக்க முடியும்; இல்லாவிட்டால் திருமணம் செய்து விடுவார்கள் என்ற பயத்திலும் இன்றைக்குப் பெண்கள் வகுப்புகளைக் கவனித்தல், விவாதித்தல் போன்ற ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுகின்றனர். தங்களை முன்னேற்றிக்கொள்ள வேண்டுமென்ற விழிப்புணர்வு பெண்களிடம் வந்திருப்பதையும் மறுக்க முடியாது.

மாணவர்களுக்கு, தடையற்ற சுதந்திரம், ஆண் என்னும் அதிகாரம், வீட்டினரின் செல்லம், பொருளாதாரச் சுதந்திரம் போன்றவை ஆக்கமாய்ச் செயல்பட வைக்காமல், தவறான வழியில் செலுத்தும் தூண்டுகோல்களாய்க் காட்சித் திரையும் ஊடகமும் இருக்கின்றன. மட்டுமின்றி, இருபக்கத் தவறுகளையும் பேசாமல் மாணவர்கள் படும் துயரத்தையும் துன்புறுத்தல்களையும் மட்டுமே ஊடகங்கள் காட்சிப்படுத்துகின்றன. தவறான வழியில் வரும் ஆசிரியர்களிடம் நல்லாசிரியத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? அது ஒரு பண்பல்லவா? மேலும் அரசு, பெற்றோர், ஊர் மக்கள் எனப் பிற காரணிகள் விடுபட்டு கண்ணுக்குப் புலனாகக் கூடிய ஆசிரியர்கள் மட்டுமே குற்றவாளிகளாக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட ஆசிரியர்களால், இன்றைக்கு எவருமே மாணவச் சமூகத்தைக் கேள்வி கேட்க முடியாத நிலையில் நிற்கிறோம்.

விஜய் என்றொரு மாணவன். வகுப்புக்கே ஒழுங்காக வர மாட்டான். பெற்றோரை அழைத்துப் பேசியபோதும் தீர்வு கிடைக்கவில்லை. வீட்டிலிருந்து சரியான நேரத்துக்குக் கிளம்புபவன், பள்ளிக்கு வராமல் ஊர் சுற்றியபடி இருப்பான். காலையில் வருவான்; மதியம் இருக்க மாட்டான். பாதி வகுப்பிலேயே தலை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது என்று பொய்கள் பல சொல்லி, அந்த வகுப்பையே எடுக்க விடாமல் செய்வான். ஆனால் தேர்வுகளுக்கு மட்டும் மிகச் சரியாக வந்து விடுவான். மாணவர்கள் கட்டாயம் வர வேண்டிய தேவை இருக்கக்கூடிய நாட்களில், எப்படித்தான் செய்தி தெரியுமோ, மிகச் சரியாக வந்துவிடுவான். வகுப்பைக் கவனிக்காத, வகுப்புகளுக்கே ஒழுங்காக வராத இப்படிப்பட்ட மாணவர்களை எப்படித் தேர்ச்சி பெற வைக்க முடியும்? எப்படிப்பட்ட மாணவர்களாயினும் அவர்களைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நல்லெண்ணத்துடன் ஒரு விதிமுறை வைத்துள்ளது.

மிதி வண்டிக்காகவும் இலவச கணிணிக்காகவும் சேரும் மாணவர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்குள்ளேயே விடுதி இருக்கக்கூடிய சூழ்நிலை மிக நல்லதே. ஆனால், அங்கும் மாணவர்கள் ஒரு வகுப்புக்கும் அடுத்த வகுப்புக்குமான இடைவெளியில் விடுதிக்குச் சென்று சிகரெட் பிடித்து விட்டு வருவது, மது அருந்திவிட்டு வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் திருட்டுத்தனமாகக் கொண்டுவரும் அலைபேசிகளில் மிக மோசமான படங்களைத் தரவிறக்கம் செய்து சக மாணவர்களிடமும் தங்கள் தோழிகளிடமும் அதைக் காட்டி மிக மோசமாகத் தூண்டுகின்றனர். இப்படிப்பட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கூட மாணவர்கள் என்ற காரணத்தாலேயே கடும் தண்டனைக்குள்ளாக்க முடிவதில்லை. 

அண்மையில், சென்னைக்கு மிக அருகிலிருக்கும் ஒரு மேல்நிலைப் பள்ளியில் மாணவனொருவன் தலைமை ஆசிரியரின் அலைபேசியைத் திருடி, அவருடைய பேசியிலிருந்த ஒரு பெண் ஆசிரியரின் பேசிக்குத் தவறான தொனியில் குறுஞ்செய்திகளை அனுப்பித் தொந்தரவு செய்திருக்கிறான். மற்றொரு பள்ளியில் இயற்பியல் ஆசிரியரின் பேசியை எடுத்துத் தலைமை ஆசிரியரை அழைத்துக் கண்டபடி திட்டியிருக்கிறார்கள். இன்னும் ஒரு பள்ளியில் வேதியியல் ஆசிரியையின் அலைபேசி திருட்டுப் போனது. காவல் துறையில் புகார் கொடுத்தபோது குற்றவாளிகளான மாணவர்கள் பிடிபட்டனர். ஆனால், மாணவர்களாயிற்றே என்ற கருணையோடு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நெகிழ்ச்சித்தன்மை அவர்களுக்கு நன்மை செய்யாது. இத்தகைய குற்றச் செயல்களுக்கு மாணவர்களை மட்டும் நான் பொறுப்பாக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு அளிக்கப்படும் தவறான சுதந்திரமும் காட்சி ஊடகங்களின் பிழையான வழிகாட்டுதல்களும் செலுத்தும் வழிகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன். 

இப்படிப்பட்ட மாணவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். ஆனால் அதன் விகிதாச்சாரம் தலைகீழாய் மாறி இருப்பதே அதிர்ச்சி தரக்கூடியதாகவும் நாளைய தலைமுறை குறித்த கவலையே ஏற்படுத்துவதாகவும் உள்ளது. தன்னுடன் படித்த 9ஆம் வகுப்புப் பள்ளி மாணவியிடம் பழகி, அது குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவுக்குப் போய்ப் பிறகு பெற்றோர் தலையிட்டுத் திருமணம் செய்து கொண்டு பள்ளிக்கு வந்த 12 ஆம் வகுப்பு மாணவனை எனக்குத் தெரியும். அவனால் தொடர்ச்சியாக பிற மாணவர்களின் கிண்டல்களைச் சகித்துக் கொள்ள முடியாமல் பள்ளியை விட்டு நின்றவன், தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இன்றைக்கு மீன்பாடி வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறான். அவனுடைய வயது 22. நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டுமென்று நினைத்துப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, கவனச் சிதறல்களால் வாழ்க்கையை இழக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகுதியாகி வருவது கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வழியாக அரசும் பெற்றோரும் கண்விழிக்கும்போது ஒரு தலைமுறையை நாம் இழந்திருப்போம்.

இங்கிருந்துதான் பெரும்பாலும் சமூக விரோத சக்திகளும் அரசியல் கட்சித் தொண்டர்களும் திரை நடிகர்களுக்கு அடிப்பொடியாய் இருக்கும் ரசிகக்கூட்டமும் உருவாகிறது. இங்கிருந்தே தான் தேர்ந்த கலை ரசனையுடன், சிந்திக்கும் ஆற்றலுடன் மாணவர்கள் உருவானார்கள். அந்தச் சூழல் மாறி மெல்லக் கவனித்தலின்றி அழுகும் பழத்தைப் போல மாணவச் சமூகம் அழுகிக்கொண்டிருக்கிறது. இதையே தேர்வு முடிவுகள் ஒவ்வொரு வருடமும் காட்டுகின்றன. இதை நாம் கவனிக்காமல் போனோமானல் நாளைய சமுதாயத்தை இழந்துவிடுவோம். கல்விக்கும் மாணவ சமூகத்துக்கும் முதன்மை தராத அரசு, அவர்கள் சமூக விரோத சக்திகளாக மாறி அச்சுறுத்தும்போது அவர்களைக் கண்டு பயப்படும்; சிறையில் தள்ளும். பெற்றோர் எப்போதும் போலக் கண் கெட்ட பிறகு வருந்திப் புலம்புவர். எது எப்படியாயினும் இழந்ததை என்றைக்கும் பெற முடியாது என்பதை உணர்ந்து விழித்துக் கொள்வதே நமக்கும் சமூகத்துக்கும் நன்மை தரும். இன்றைய பாலியல் சிக்கல்கள் போன்ற சமூகத்தின் பெரும்பான்மைப் பிரச்சனைகள் அந்தப் பருவத்திலிருந்தே தொடங்குகின்றன என்பதை நாம் மனத்தில் இருத்தியபடி அவர்களை அணுகும்போதுதான் நோயற்ற சமூகத்தை உருவாக்க முடியும்.

வெட்டப்படும் சிறகுகள்

நன்றி பாவையர் மலர்


ஐம்பூதங்களால் ஆன இந்த உலகத்தின் இயக்கத்தைச் சாத்தியப்படுத்தியது ஆணும் பெண்ணுமான உயிரிகள். ஆனால் இந்த உயிரிகளிடமும் பேதத்தைக் கற்பிக்கிறது மனிதச் சமூகம். ஒருவரை உயர்த்தியும் ஒருவரைத் தாழ்த்தியும் காலங்காலமாய்ச் சொல்லி வருகிறது. அதுவே மனித மனத்தில் விதைத்து முளைக்கிறது. 

சிறுவயதிலிருந்தே கற்பிக்கப்படும் இவ்வேற்றத்தாழ்வுகள் இரு உயிரிகளிடமும் வெவ்வேறு விதமான மாற்றங்களை உண்டு பண்ணுகிறது. ஆணின் மனத்தில் தான் உயர்ந்தவன், கண் கலங்காதவன், பெண்ணைக் கட்டிக் காப்பாற்றப் புறப்பட்டவன் என்ற பிம்பத்தையும் பெண் மனத்தில், தான் தாழ்ந்தவள், ஆணால் காப்பாற்றப்பட வேண்டியவள், சட்டென்று உடைந்து விடக்கூடியவள் என்ற பிம்பத்தையும் வளர்த்தெடுக்கின்றது. சிறு வயதிலிருந்தே வளர்த்தெடுக்கப்படும் இப்பிம்பங்ளே ஆணாய்ப் பெண்ணாய் மாற்றம் பெறுகிறார்கள்; அதிலிருந்து வெளிவர முடியதபடி உருவேற்றப்படுகிறார்கள். உயர்ந்த ஞானத்தையும் அறிதலையும் கொண்ட மானிடர் கூட இதிலிருந்து விலக முடியாமல் சிக்குண்டு தடுமாறுவதையும் நாம் அறிவோம்.

பெண் அடிமைப்பட்ட காலத்திலிருந்து இன்றைக்கு வரையுமான நீண்ட நெடிய போராட்டத்தையோ, ஏற்பட்டுள்ள மாறுதல்களையோ, இன்றைக்கும் மாறாமலே இருக்கின்ற பெண்ணடிமைத்தனச் சிந்தனைகளையோ பற்றி இங்கு பேசப் போவதில்லை. ஆனால் ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் என்னும் பாரதியின் வரிகள் இன்று பெரும்பான்மையும் நனவாகி, பெண் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்குப் போகும் காட்சி ஒவ்வொரு நாளும் நமக்குக் காணக் கிடைக்கிறது.

பெண்கள் வீட்டுப் படியிறங்குவதே பாவமென்று பேசிய வேடிக்கை மனிதர்கள் வீழ்ந்துவிட்டனர். ஆனாலும் பெண்கல்வியில் சில அளவீடுகளும் கற்பிதங்களும் இன்றைக்கும் இருப்பதை நாம் மறுக்க முடியாது. இங்கு சில அவதானிப்புகளையும் நோக்கலாம். சங்க இலக்கிய காலத்தில் 40 க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு காப்பியம் கூடப் பெண்ணால் எழுதப்பட்டதில்லை. நீதி இலக்கியக் காலத்திலும் சிற்றிலக்கிய, பக்தி கால கட்டத்திலும் எழுதிய பெண்களின் பட்டியலை இரு கைவிரல்களுக்குள் அடக்கி விடலாம். எனில், இடைக்காலத்தில் இவ்வளவு குறைவாகவேவா பெண்கள் எழுதியிருப்பார்கள்? அல்லது அவை அழிக்கப்பட்டனவா? எழுதாமல் இருந்தார்களா? கல்வி மறுக்கப்பட்டதன் விளைவா? போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் விடையில்லை.  கலை, அரசியல், அறிவியல், தத்துவம், அறவியல் என அனைத்துத் துறைகளிலுமான பெண்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாகவே இருப்பதை நாம் கவலையுடனே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று சொல்ல வேண்டிய அவசியம் வள்ளுவருக்கு ஏன் ஏற்பட்டது?

இன்றைய நவீன காலத்திலும் கூட, ஒரு பெண் எவ்வளவு படிப்பது என்பது அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அவள் படிப்பதற்குரிய செலவுக்கும் திருமணத்துக்கான செலவுக்கும் இடையிலான பண மதிப்பீடுகள் அவளுடைய கல்வியில் குறுக்கீடு செய்து கொண்டேயிருக்கிறது. இசுலாமியச் சமூகத்தில் ஓரளவு வரவேற்கத்தக்க மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பினும் கூட மொத்தப் பெண் சமூகத்துக்கும் அவர்களுக்கும் இடையில் இன்னும் ஓர் இடைவெளி இருப்பதைப் பார்க்க முடிகிறது. பள்ளியில் ஆசிரியராக பத்தாண்டுகளுக்கும் மேல் வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவத்தில் சொல்கிறேன். இசுலாமிய சமூகத்தில் பெண் பத்தாம் வகுப்பைக் கடப்பதே பெரிதெனக் கருதப்படுகிறது. கிராமத்தில் இன்றைக்கும் மொத்தப் பள்ளியில் 5 அல்லது 10 மாணவிகளே தொடர்ச்சியாக 12ஆம் வகுப்பு வரையிலும் படித்தவர்களாக இருக்கிறார்கள். இடைநின்றவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

அண்மையில் மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன. தொடர்ந்து பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கி விட்டன. 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து பெண்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்து வருவதையும் அவர்களே முன்னணியில் இருப்பதையும் முதல் மதிப்பெண்களை அடைவதையும் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து கவனிப்பவர்கள் அறிந்திருப்பர். உண்மை, ஆனால் இந்த எண்ணிக்கை, கல்லூரி செல்லும், மேற்படிப்பு, ஆய்வுப் படிப்பு என்ற தொடர்ச்சியில் பார்க்கும்போது குறைந்துகொண்டே வந்து மிகக் குறைவான பெண்களே எதிர்நீச்சல் போட்டு முன்னேறுகின்றனர்.

பொருளாதாரத்தால் படிக்க முடியாமல் போகும் சூழலோடு பெண் என்பதாலேயே அதிகம் படிக்க வேண்டியதில்லை என்ற அலட்சியமும் பெரும்பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. ஒரு மாணவி தனித்துப் பள்ளிக்கு வரக் கூடியசூழல் சரிவர இல்லாத நிலையில் அரசு சார்பாக மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை ஆண்டுதோறும் வழங்கி வருவது மிகச் சிறப்பானதொன்று. கிராமத்தில் அது எத்துணைப் பயனுடையதென்பதைச் சொல்லில் விளக்க முடியாது. அதே போல நகரத்தில் படிக்கும் மாணவியரை விடவும் கிராமத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்குச் சிக்கல்கள் அதிகம். ஏழைப் பெற்றோருக்குப் பிறக்கும் பெண்கள் படிக்கும் ஆர்வமிருப்பினும் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் குடும்பத்துக்கான பலியீடுகளாகவே ஆகி விடுகின்றனர். குடும்பத்தின் வறுமையைப் போக்க 12 ஆம் வகுப்போடு தன் படிப்பை முடித்துக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். வீட்டுக்கு வந்து, வேலைக்குப் போன அம்மா வருவதற்குள் சமையலை முடிக்கப் பரபரக்கின்றனர். இதையெல்லாம் பார்த்தும் ஏதும் பெரிதாகச் செய்ய முடியாத நிலையில் மனம் வெம்புகிறது. வீட்டில் ஆண் குழந்தையும் இருந்து பெண் குழந்தையும் இருந்து ஒருவர் மட்டுமே படிக்கும் சூழலிருப்பின் யாருக்குப் படிக்கும் ஆர்வம் இருக்கிறது என்று பெற்றோர் சிந்திப்பதில்லை. உடனடியாக, அந்தப் பெண் குழந்தைக்கே கல்வி மறுக்கப்படுகிறது. தமிழகத்தின் பல கிராமங்களில் இன்றைக்கும் இந்த நிலைதான்.

நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பெண் திடீரென்று சில நாட்கள் பள்ளிக்கு வர மாட்டாள். திடீரென்று மாறுதல் சான்றிதழ் கேட்டு அவளுடைய பெற்றோர் வருவர். அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும். அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக படிப்பு நிறுத்தப்படும். இப்படியான பல குழந்தைகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறேன்.

பூங்குழலி, நான் பணியாற்றிய பள்ளியில் மேல்நிலையில் படித்த ஒரு மாணவி; இன்றைக்கு அவள் சென்னைப் பல்கலையில் கணிதத்தில் மேல்பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். தமிழ் வழியில் படித்த அந்தப் பெண், ஆங்கில வழியில் கல்லூரியில் கணிதம் படித்து முதலிடம் பெற்று, சென்னைப் பல்கலையில் நடந்த மேல்பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்விலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தாள். பள்ளியிலேயே பேச்சு, கவிதை, கட்டுரை போன்ற போட்டிகளில் முன்னணியில் நிற்பாள். இனிமையான குரல் வளம் கொண்டவள். கல்லூரியிலும் தேசிய மாணவர் நலத் திட்டத்தில் கல்லூரி அளவில் தலைவியாக இருந்து செயல்பட்டவள். இன்றைக்கு, கணித முதுகலையில் 90% தேர்ச்சியுடன் இன்னும் முன்னேறிக் கொண்டிருக்கிறாள். இந்தக் கடின உழைப்புக்குப் பின்னால் ஒரு கண்ணீர்க் கதை இருக்கிறது. எல்லாப் பெற்றோரையும் போலவே அவளுடைய பெற்றோரும் நகரத்துக்குக் கல்விக்காக அனுப்ப அஞ்சியபோது சில நாட்கள் பட்டினி கிடந்து, ஆசிரியர்கள் பலர் சென்று பேசிய பின்னரே அவள் பெருநகரத்தின் ஒரு கல்லூரி விடுதியில் அடைக்கலமானாள். அப்போதும் அஞ்சியபடியே இருந்த அவளுடைய பெற்றோருக்கு இன்றைக்கு அவளுடைய மதிப்பெண்கள் பெரும் இளைப்பாறுதல். அவளுடைய படிப்புச் செலவு முழுவதையும் அவள் தன் மதிப்பெண்களின் உயர்வில் அடைந்தாள். சிறபபான மாணவியாக, இவள்தந்தையும் தாயும் என்னோற்றான்கொல் என்னும் வாழ்த்துகளுடன் ஆசிரியர் மெச்சும் மாணவியாக இன்னும் உயரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாள். தன் நிலையைத் தக்க வைக்க அவள் ஆர்வத்துடனும் விடா முயற்சியுடனும் படிக்கிறாள்.

இங்கே, மற்றொரு பெண்ணைப் பற்றியும் பேச வேண்டிய தேவை இருக்கிறது. அவள் அபிராமி. பூங்குழலியைப் போலவே சிறப்பாகப் படிக்கக் கூடிய அறிவான பெண். ஆனால் அவளுடைய பெற்றோர் அவளுடைய அழகைக் கண்டு அஞ்சினர். பத்தாம் வகுப்பிலேயே நிறுத்த முயன்றபோது ஆசிரியர்களின் உதவியால் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தாள். இப்போது தேர்வெழுதியிருக்கிறாள். நிச்சயம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவாள். ஆனால் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் தன் தந்தையை காப்பாற்ற நினைக்கும் அவள் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து விட்டாள். ஆசிரியர், அவளிடம் அரசே இலவசமாகக் கொடுக்கும் கல்லூரிக் கல்வி பற்றியும் இலவச விடுதி போன்ற வசதிகளைப் பற்றியும் பல நாட்கள் எடுத்துச் சொல்லியும் அவள் தன் தந்தைக்காகத் தன் படிக்கும் ஆர்வத்தைக் கருக்கிக் கொண்டாள்.

இங்கே பூங்குழலிகளை விடவும் அபிராமிகளே அதிகம் இருக்கிறார்கள். ஆனால் மிகச் சுமாராக, அல்லது படிக்காமலே அலப்பறை செய்தாலும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும், உத்தியோகம் புருஷ லட்சணம். அதற்காகவாவது படிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டாவது படிக்க வைக்கப்படுகிறார்கள்.


பெண்ணிற் பெருந்தக்க யாவுள..

நன்றி : பாவையர் மலர்


மஞ்சு காலை 7 மணிக்கே தன் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பி விடுவாள். அப்போதுதான் 12 ஆம் வகுப்புப் படிக்கும் அவள் பள்ளியில் 8.30 மணிக்கு நடக்கும் சிறப்பு வகுப்புக்கு வந்து சேர முடியும். 7 மணிக்கே கிளம்புவதனால் அவள் காலையில் எதுவும் சாப்பிடுவதில்லை; மதிய உணவும் கூடத்தான். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே சத்துணவு என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவளுடைய ஊரிலிருந்து பள்ளிக்குப் பேருந்து வசதி கிடையாது. சரியான பாதை இல்லாததால் பேருந்து இன்னும் அவளுடைய ஊருக்குள் நுழையவில்லை. அவளும் அவளையொத்த பிற மாணவிகளும் நடந்தேதான் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். மாலை 5.30 மணிக்குச் சிறப்பு வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு அவள் சென்று சேர இரவு 7 மணியாகி விடும். இடையில் அவள் செல்லும் பாதை, ஒற்றையடிப் பாதை மட்டுமல்ல; பல நேரத்தில் ஆளரவமற்ற பாதையும் கூட. வெகு சில நேரத்தில் அந்த வழியாகச் செல்லும் வண்டிகளை நிறுத்தி, அதில் ஏறிச் செல்வதுமுண்டு. இது ஏதோ குக்கிராமத்தைச் சேர்ந்த ஊரைப் பற்றி நான் சொல்வதல்ல. சென்னையிலிருந்து ஒரு மணிநேரப் பயணத்திலிருக்கும் சென்னைக்கருகிலுள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். 

அண்மையில் தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரமும் தூத்துக்குடியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவி சிதைக்கப்பட்ட செய்தியும் அதற்குப் பிறகு நான் இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வினாடி வரையிலும் கூடப் பெண்களுக்கான கொடுமைகள் நிமிடம்தோறும் நடந்துகொண்டிருக்கின்றன என்பது நம் செயலற்ற தன்மையைக் காட்டும் உண்மை. மஞ்சு போன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தினமும் பாதுகாப்பற்ற சூழலுடன்தான் பள்ளிக் கல்வி பெற வந்து கொண்டிருக்கிறார்கள். அவளுக்கு அரசால் கொடுக்கப்பட்ட மிதிவண்டி அவளுடைய தந்தையின் கடனடைக்கப் பயன்பட்டது. கிராமத்தில் பணியில் சேர்ந்த புதிதில் பேருந்து மாணவர்கள் அருகில் நிறுத்தப்படாமல் தள்ளி நிறுத்தப்படுவதையும் சிலசமயம் நிறுத்தாமலே செல்வதையும் கண்டு மனம் கொதித்திருக்கிறேன்; நடத்துநரிடம் சண்டையிட்டிருக்கிறேன். பிறகு மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கப்பட்ட பிறகு அவர்கள் பேருந்தில் இடிபடாமல் நிம்மதியாக வண்டியில் வருவதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் இன்னும்கூட ஒரு பகுதிப் பெண்களுக்கு இது சென்று சேரவில்லையென்பதோடு மிக அபாயமான சூழலில் அவர்கள் வந்து செல்கிறார்கள் என்பதும் மனத்தில் குறித்துக் கொள்ளவேண்டியது. நடந்து செல்கையில் பாம்பு உள்ளிட்ட பயங்களோடு ஆணையும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவசரத்திற்கு ஏதேனும் ஒரு வண்டியை நிறுத்தி ஏறினால் அது மற்றொரு ஆபத்தை வலிய அழைப்பதாக முடிகிறது. கிராமத்திலிலுள்ள மாணவிகள் தங்கள் கல்வியைப் பள்ளிப் படிப்போடு முடித்துக் கொள்வதற்கு இதுவுமொரு முக்கியமான காரணம்.

கல்விக்கான பயணத்தில் இங்கு மட்டும்தான் சிக்கலென்று சொல்லிவிட முடியாது. முன்னைவிடவும் இன்றைக்கு பெண்கள் ஓரளவு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு அவர்களுடைய பெற்றோர் இருவருமே இன்றைக்கு வேலைக்குச் செல்லத் துவங்கியிருப்பதும் அலைபேசி உள்ளிட்ட வசதிகளும் துணை செய்கின்றன. ஆனால் இந்தக் கட்டற்ற சுதந்திரமே அவர்களுக்கு வேறுவிதமான சிக்கல்களைத் தருவிப்பதாக இருப்பதையும் சொல்ல வேண்டும். நாம் நினைத்தால்கூட வீட்டின் நடுவில் மிக அமைதியாய் அமர்ந்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை வெளித் தள்ள முடியாது (மிதிவண்டியை விற்பவருக்கு இலவசத் தொலைக்காட்சியை விற்கத் தோன்றுவதில்லை). பள்ளியிலிருந்து கிளம்பி வீடு செல்லும் குழந்தைகளுக்கு இலவசமான பொழுதுபோக்கைத் தொலைக்காட்சி மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. அதில் அறிவை விரிவாக்கும் பல நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால் பொதுமக்களில் பெரும்பான்மையோர் நகரம், கிராமம் என்ற பேதமின்றி குழந்தைகளின் மனத்தைச் சிதைக்கும் தொடர்களையும் திரைப்படங்களையும் குத்தாட்டங்களையும் இன்ன பிற நிகழ்ச்சிகளையுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் முழுமையான மன வளர்ச்சி அடையாத நம் குழந்தைகளும் இதே நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். இவை அவர்களுடைய மனத்தில் விதைக்கும் நஞ்சுகளைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.

இத்தனை ஆபத்தான சூழலில் வரும் மாணவிகள் பள்ளிக்கு வருகையில் கவனித்தால் புரியும்; அவர்களுடைய ஆடை அணியும் முறை, அலங்காரம், பட்டையான கொலுசும் அதிகப்படியான மலர் உள்ளிட்ட அணிகளும் எல்லாம் அழகுபடுத்திக் கொள்வதாகவே நினைத்துக் கொள்கிறார்கள். மாணவர்களும் கூட, அவர்கள் விரும்பும் நடிகரின் தலையலங்காரம், கைகளில் பட்டை, கழுத்தில் இரும்புச் சங்கிலிகள், அருவருக்கத்தக்க அளவுக்கான குட்டிச் சட்டைகள், இறுக்கமான பேண்ட்கள் எனத் தங்கள் சீருடையைச் சீரழித்தே அணிந்து வருகிறார்கள். இதற்கு அவர்களை மட்டும் குற்றம் சுமத்த முடியாது. வீட்டிலிருந்து கிளம்புகையில் அவர்களை வழியனுப்பும் பெற்றோரும் இதைக் கண்டுகொள்வதில்லையென்பது கசப்பான ஒன்று. இது மாணவிகளுக்கு மற்றொரு சிக்கலாக மாறி விடுகிறது. இளம் வயதில் தங்களைப் பிறர் திரும்பிப் பார்ப்பதை, பின் தொடர்வதை ஒரு கட்டம் வரையிலும் அவர்கள் ரசிக்கவே செய்கிறார்கள். இதை உளவியல்ரீதியாக நாமும் புரிந்து கொள்கிறோம். ஆனால், தன்னைப் பார்க்கும் பலரின் கண்களில் இருக்கும் விஷத்தை அந்தப் பெண்கள் அறிவதில்லை. குறிப்பாக, தனியாகச் செல்லும் மாணவிகளை இப்படிக் கவனித்து வம்பிழுப்பது, சீண்டுவது, பாலியல் தொந்தரவு தருவது ஆகியவை அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. இதற்கு மறைமுகமாக, தங்களின் உடையலங்காரமும் ஒரு காரணமென்பதை இவர்கள் அறிவதில்லை. இப்படியான சிக்கல்கள் எழுந்து, அதனால் அவர்கள் பாதிக்கப்படும்போதோ அல்லது அதை வீட்டில் தெரிவிக்கும்போதோ பெற்றோர் எடுக்கும் மிகச் சுலபமான தீர்வு, பள்ளியிலிருந்து நிறுத்தி விடுவது. 
பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளி வரும்போது ஊடகங்கள் தரும் புள்ளி விவரங்களைக் கவனித்தால் நமக்குச் சில விஷயங்கள் விளங்கும். தேர்ச்சியடையும் மாணவர்களை விட மாணவிகளின் சதவிகிதமே அதிகமாக இருக்கும். இத்தகைய மன அலைக்கழிப்புகள் மாணவர்களையே கல்வி சார்ந்து பெரும்பாலும் பாதிக்கிறது. எனவே அவர்களுடைய தேர்ச்சி சதவிகிதம் குறைவாகவே இருக்கிறது. மாணவிகள் மேலே படிக்க வேண்டிய ஆர்வத்திலும் தேர்ச்சி அடையாவிட்டால் காத்திருக்கும் திருமண அபாயத்திற்காகவாவது எப்படியாவது படித்துத் தேர்ச்சி அடைந்து விடுகின்றனர். ஆனால் இப்படித் தேர்ச்சி அடையும் மாணவிகளில் எத்தனை சதவிகிதம் பேர் கல்லூரிக்குப் போகிறார்களென்று ஒரு கணக்கு எடுத்துப் பார்த்தால் அந்தத் தேர்ச்சி விகிதம் சட்டென்று குறைந்து போவதை உணரலாம். இளங்கலை படிப்பது ஒரு கண்டமென்று வைத்துக் கொண்டால் அது தாண்டி முதுகலை, முனைவர், மருத்துவம் ஆகிய தொழில்நுட்பப் படிப்புகளில் பெண்களின் சதவிகிதம் குறைந்தே இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். கணவனை விட மனைவி குறைவாகப் படித்திருக்க வேண்டும், பெண்ணை அதிகமாகப் படிக்க வைத்துப் பின் அவள் இன்னொரு குடும்பத்துக்குத் தானே உதவியாக இருக்கப் போகிறாள் போன்ற எண்ணங்களும் இதற்குப் பின்னால் இருக்கின்றன.

எட்டாவது படிக்கும், தந்தையை இழந்த ஒரு மாணவியை, இப்படியான ஒரு சிக்கலுக்காகப் பள்ளியிலிருந்து  அவளுடைய தாயார் நிறுத்திவிட்டார். பிறகு ஆசிரியர்களின் முயற்சியால், அவள் தொடர்ந்து வருகிறாள். இப்படி அவளைக் கேலி செய்த சிலரில் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களும் அடக்கம். அவர்களையும் அழைத்துப் பேசி, தவறென்று உணர்த்தி, இனியும் தொடர்ந்தால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதையும் சொல்ல வேண்டியிருந்தது. ஆண்கள் பெண்களைக் கேளிக்கைக்கான பொருளாக மட்டுமே பாவிப்பது எந்தக் காலத்திலும் மாறாமலே இருக்கிறது என்பது வருந்தத்தக்கது. அதனை எழுத்து, காட்சி ஊடகங்கள் பெரும்பான்மையும் திட்டமிட்டே செய்து கொண்டிருக்கிறது என்பது கண்டிக்கத்தக்கது. வளரிளம் பருவத்தினரின் உளவியலை உணராமல் அல்லது அவர்களை வேண்டுமென்றே தூண்டும் வகையில்தான் இன்றைய நிகழ்ச்சிகள் இருக்கின்றன. திரைப்படங்கள் அதற்கு எண்ணையிட்டு வளர்த்தெடுக்கின்றன. இவற்றை உண்மையென்றே தன் மனத்தில் பதித்துக் கொள்ளும் இளைய தலைமுறை ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் வரும் மனிதர்களைப் பிரதியெடுக்க முயற்சிக்கிறார்கள்; அவர்களையே தங்கள் முன்னுதாரணங்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். தவறான முன்னுதாரணங்களால் தங்கள் வாழ்க்கை சிதைவதை அவர்கள் உணர்வதில்லை; கல்வி கற்க வேண்டிய வயதில் மனம் போன போக்கெல்லாம் அலைக்கழிந்து, பின் தொலைந்த வாழ்வை எண்ணி வேதனைப்பட்ட மனிதர்களாய் அலைபாயத் தொடங்குகிறார்கள்.

ஆணைச் சக பாலினமாய் மதிக்கப் பெண் தவறி விடுகிறாள்; ஆணும் பெண்ணைத் தன் தோழமையாய்ப் பார்ப்பதேயில்லை. பள்ளிகளில் ஆண், பெண் பள்ளிகள் தனியாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அல்லது, ஆண், பெண் இரு பாலருக்கான பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பேசிக் கொள்ளவே அனுமதிக்கப்படுவதில்லை. இது அவர்களிடைய இருக்கும் இனக் கவர்ச்சியை ஊதிப் பெரிதாக்கி உடலியல் கவர்ச்சியை முன்னிலைப் படித்திவிடுகிறது. அப்படியே தப்பித் தவறி ஒரு மாணவனும் மாணவியும் பேசி விட்டால் சக தோழமைகளே அதைக் காதலென்று பெயரிட்டுப் பரப்பி விடுவதும் சந்தேகப்பட்டு ஆசிரியர்கள் கடுமையாகக் கண்டிப்பதும் இயல்பாக மலரும் நட்பைக் கசக்கும் அவலமே நிகழ்கிறது.

12 ஆவது படிக்கும் மாணவன், 8, 9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவிகளைப் பின்தொடர்வதும், அவர்களின் வகுப்புகளுக்குக் காரணமற்றுச் செல்வதும் வகுப்புக்கு வெளியே நின்று அவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதும் அன்றாட நிகழ்வாகிறது. இதை மறைமுகமாக வரவேற்கும், ஊக்குவிக்கும் மாணவிகள் இதனால் தங்கள் கல்வி பாதிப்பதை, தடைபடுவதை உணர்வதில்லை. இரு பாலினருக்குமே சிக்கலெனினும் மாணவி வீட்டில் உடனே அவளுடைய படிப்பை நிறுத்தி விடுவதும் அவளுக்குத் திருமண ஆசை வந்துவிட்டது என்று கேவலமாகப் பேசுவதும் மானத்துக்குப் பயந்து திருமணம் செய்து கொடுப்பதும் நிகழ்கிறது. ஒரு மாணவியை அவளுடைய கவனமின்றி ஒருவன் நெடுநாள் தொடர்ந்து வருவதைக் கவனித்த, அப்பகுதியில் கடை வைத்திருந்த ஓர் உறவினர் அவளுடைய தந்தையிடம் சொல்லப்போக, மிக நன்றாகப் படிக்கக்கூடிய, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த அந்த மாணவி யாரோ ஒரு முகம் தெரியாத மனிதனுக்கு மனைவியாக்கப்பட்டு வீட்டில் மூலையிலிருக்கும் சமையலறையில் முடக்கப்பட்டாள். அவளுடைய வாழ்க்கை மாறிப் போனதற்கு யாரைக் குற்றம் சாட்டுவது?

சமயங்களில் எல்லை மீறி, வாழ்வில் தங்களை இன்னும் நிலைநிறுத்திக் கொள்ளாத அந்த மாணவனும் மாணவியும் ஓடிப் போவதும் வாழ்வின் துயர அலைகளில் சிக்கிப் பின்னர் காதலையே வெறுப்பதும், சில வேளைகளில் தற்கொலை செய்வதும் நடக்கிறது. காதலித்தவன் பின்னால் சென்று, அவனால் கைவிடப்பட்டு, மிகக் குறைவான கூலிக்குப் பக்கத்திலிருக்கும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மாணவியையும் எனக்குத் தெரியும். பள்ளி இறுதித் தேர்வின் கடைசி நாளில் தேர்வை எழுதி முடித்தபின் பள்ளியிலிருந்தே ஓடிப் போய், கையிருப்பைச் செலவு செய்தபின், வீட்டார் கையில் பிடிபட்டு, வேறொருவனுக்கு மணமுடிக்கப்பட்டு அந்தப் பெண் சென்று விட, அந்தக் கிராமத்தின் பேருந்து நிலையத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும் மாணவனையும் நானறிவேன். நம் திரை இயக்குநர்களுக்குத் தெரிந்தால் இவர்களுடைய வாழ்க்கையையும் ஒரு காவியக் காதலாக மாற்றி, இன்னும் ஒரு மாணவக் கூட்டம் ஓடிப் போவதற்குத் தூண்டுகோலாக இருப்பார்கள்.

இன்றைக்கு இருக்கக்கூடிய உணவு முறை குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மட்டுமே கவனிக்கிறதேயன்றி, அவர்களுக்குரிய சத்துகளைத் தருவனவாக இல்லை. மிகச் சிறு வயதிலேயே பெண்களும் ஆண்களும் பருவமடைந்து விடுகிறார்கள். அவர்களுடைய ஹார்மோன்கள் திரைப்படங்களாலும் ஊடகங்களாலும் தூண்டப்படுகின்றன. அலைபேசிகளில் சக மாணவிகளை மட்டுமின்றி ஆசிரியைகளையும் மோசமான கோணங்களில் படம் பிடிப்பது, கணினியிலிருந்து நீலப் படங்களையும் பிடித்த நடிகைகளின் ஆபாசப் படங்களைத் தரவிறக்கம் செய்து ரசிப்பது என மாணவர்களில் பெரும்பாலானோர் மோசமானதொரு மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்படியான சூழலில், அவர்களுடைய உடல் இச்சைக்கு, கைக்கெட்டும் தூரத்தில் இருக்கக்கூடிய மாணவிகளே பலியாகிப் போகிறார்கள்.

அண்மையில் நடந்த தருமபுரி காதல் சம்பவத்தில்கூட, இருவருமே வளரிளம் பருவத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள். தங்கள் கல்வியை இன்னும் முடிக்காதவர்கள். திவ்யாவின் பெற்றோர், அவளுக்குத் திருமண முயற்சி எதையும் செய்யத் தொடங்கவில்லை. படித்து, நல்ல வேலையில் அமர்ந்தபின் தன் காதல் பற்றியும் திருமணம் பற்றியும் பெற்றோரிடம் பேசியிருக்கலாம். அவர்கள் அனுமதிக்காவிடில் இதே முடிவை அப்போது எடுத்திருக்கலாம். யோசிக்காமல் எடுக்கக்கூடிய இம்மாதிரியான முடிவுகள் பல துன்பங்களுக்குக் காரணமாகின்றன. இந்தச் சம்பவத்தில் பேசப்படும் சாதி போன்றவை குறித்து விவாதிக்கும் களம் இது அல்ல. இன்றைய இளந்தலைமுறையினரின் அவசரம் பற்றியே இதைச் சொல்லிச் செல்கிறேன். இன்னமும் காதல் போன்ற பல விஷயங்களை, குழந்தைகளுடன் பெற்றோர் ஆரோக்கியமாக உரையாடும், விவாதிக்கும் சூழல் இல்லை என்பதையும் இங்கே வேதனையுடன் பகிர வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் கடந்த வருடத்தில் 5,484 குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர் என்பதும் 1408 குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர் என்றும் தேசியக் குற்றப்பதிவு நிறுவனத்தின் ஒரு தகவல் கூறுகின்றது. அரசால் பதிவு செய்யப்பட்ட தகவலே இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இருக்குமாயின் வெளிவராத இது போன்ற சம்பவங்கள் இன்னும் மிகுதியாகவே இருக்கும். கோயமுத்தூரில் இரண்டு குழந்தைகளைக் கடத்திச் சென்று எட்டு வயதேயான அந்தப் பெண் குழந்தையைப் பாலியல் வல்லுறவு செய்ததுடன் அவளுடன் இருந்த அவள் தம்பியையும் தூக்கிக் கால்வாயில் போட்டுக் கொலை செய்ததையும் நாம் மறந்து விட முடியாது.

சேலத்தில் ஒரு பள்ளி மாணவி பள்ளியிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாள். உடற்கூறு ஆய்வில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் விந்து அவளுடைய வயிற்றில் இருந்ததாகத் தெரியவந்தது. தொழில் நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவி, தன்னைக் காதலிக்க மறுத்தாள் என்ற காரணத்துக்காக அவளுடைய முகத்தில் ஆசிட் ஊற்றிச் சிதைத்தான் அவளுடைய தோழனான ஒரு மாணவன். தங்களை நம்பி உடன் வரும் தோழியைக் கூட்டாகச் சேர்ந்து சிதைத்திருக்கிறது ஒரு மாணவர் கூட்டம். காதலிக்க மறுத்த தோழியை நண்பனின் துணையுடன் வெளியே வரச் செய்து கத்தியால் குத்திக் கொலை செய்கிறான் ஒரு மாணவன். இப்படி, பெண்கள் படிக்க மட்டுமல்ல வெளியே வருவதற்கே லாயக்கில்லாத சூழலே இன்று தமிழகத்திலிருக்கிறது. கல்லூரியை விட்டு வெளியே வந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவளைக் கேலி செய்து ஆட்டோவுக்குள் இழுக்க முயற்சி செய்து, அதிலே மாட்டிக் கொண்ட துப்பட்டாவுடன் இழுக்கப்பட்டு இறந்து போன எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷாவை மறக்க முடியுமா?

பாலின்பம் என்பது உயிரினங்களின் அடிப்படைத் தேவையென்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்குப் பண்பாட்டுப் புனிதம் கற்பிக்கும் அதே சமூகம்தான் தன் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு தன் குழந்தைகளுடனே ஆபாசக் குப்பைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒற்றை அறைகளில் வசிக்கும் வறுமையின் பிடியிலிருக்கும் குழந்தைகளுக்கு எல்லாக் காட்சிகளும் சிறு வயதிலேயே பழகிப்போய் விடுகின்றன. பள்ளிக்குள் தன்னுடன் பயிலும் சக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் துன்புறுத்தப்படும் மாணவிகள் வெளியே இருக்கும் சமூக நச்சரவங்களாலும் பாதிக்கப்படுகின்றனர். மட்டுமின்றி, அதிர்ச்சி தரத்தக்க தகவல், பெண்குழந்தைகள் தங்கள் நெருங்கிய உறவுகளாலேயே இப்படித் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது. பெங்களூரில் பள்ளி செல்லும் 4 வயதுச் சிறுமியொருத்தி பள்ளி வாகனத்தை ஓட்டும் ஓட்டுநராலும் கிளீனராலும் வன்புணரப்பட்டிருக்கிறாள். வீடு திரும்பிய சிறுமி அவளுடைய யோனியில் வலியென்று அழ, பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். பரிசோதனையில் வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை விசாரிக்க, விஷயம் வெளியாகி இருக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து மரணத்தறுவாய் வரையும் பெண் இந்தச் சோதனையிலிருந்து மீள முடியாத ஒரு சிக்கல் இந்தியத் திருநாட்டிலிருப்பதை நாம் மறுக்க முடியாது. இதற்கு வி.வி.ஐ.பிக்குப் பிறந்த பெண் குழந்தைகளும் விதிவிலக்கல்ல.

உலகமயமாதல் போன்ற இன்னும் பல காரணங்களால் நம் ஆணாதிக்கச் சமூகம் பாலியல் பண்பாடற்று மேலும் நோய்ப்பட்ட சமூகமாய் மாறி இருக்கிறது. நம் குடும்ப அமைப்பில் ஆண் உயர்ந்தவனாகவும் பெண் சற்றே குறைந்தவளாகவும் ஏற்றத்தாழ்வுடன் பார்க்கப்படுவதை எவரும் மறுக்க முடியாது. எல்லாத் தவறுகளுக்கும் பெண் குழந்தைகளே பொறுப்பாக்கப்படுகின்றனர். புறச்சூழல்களும் அதற்குத் தக அமைந்து பெண்வாழ்வை இன்னும் சிக்கலாக்குகிறது. அக்கம்பக்கத்தார், சக தோழர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், ஏன், சொந்தத் தந்தையை, சகோதரனைக் கூட பெண் சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய அளவுக்கு நோய்மை முற்றியிருக்கிறது. பெண் பாதுகாப்பு அறவே இல்லாத தன்மையிலிருக்கிறது. நம் அண்டையில் இருக்கும், நூறு சதவிகிதக் கல்வியறிவு பெற்ற கேரளத்தில்தான் ஒரு மாணவியைச் சகோதரனும் தந்தையும் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் நடந்திருக்கிறது.

இத்தகைய சூழலில் என்ன செய்யலாம் என்று சிந்தித்தோமானால், பெண் குழந்தை, ஆண் குழந்தை என்ற பேதமின்றிப் பெற்றோர் வளர்ப்பதிலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் வாங்கிக் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களிலும் அவர்கள் செய்யும் வீட்டு வேலைகளிலும் கூடப் பேதம் கற்பிக்கப்படுகிறது. இது முற்றிலும் களையப்பட வேண்டியது. பெண்ணைச் சக உயிரியாகப் பார்க்கும் தன்மையை வீடு, பள்ளி என எல்லா இடத்திலும் ஆணின் மனத்தில் புகுத்த வேண்டிய தேவை இருக்கிறது. உடல் சார்ந்து மட்டுமான அவனது பார்வையை மாற்றவேண்டிய நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக எடுக்க வேண்டும். நடைமுறைப் பொருத்தப்பாடற்ற நம் கல்விமுறை பிரதிகளுக்குள்ளேயே நம் குழந்தைகளைச் சிக்கச் செய்திருக்கிறது. அதிலிருந்து அவர்களை மீட்டு, அன்றாட நிகழ்வுகளை அவர்கள் அறியச் செய்து, அது பற்றி சிந்திக்கத் தூண்டி விவாதிக்குமொரு கல்வி முறை அறிமுகம் செய்யப்பட வேண்டும். அறிவியல் பாடங்களில் வரும் ஆண், பெண் உடற்கூறு பற்றிய தகவல்களை இயல்பாக அவ்ர்களுக்குப் போதிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். பெண்களின் மாதவிலக்கு சுழற்சி போன்ற கவனமாக, ஆனால் முக்கியமாக எடுக்க வேண்டிய பாடங்களை எடுக்காமலே தவிர்க்கும் ஆசிரியர்களை நானறிவேன். இது மிகத் தவறானது. பள்ளியில் பாலியல் கல்வி தேவையா? இல்லையா? என்பது பற்றிய சர்ச்சையே இன்றைக்கும் முடிவடையாமல் இருக்கிறது. பாலியல் கல்வியின் அவசியம் உணர்வதுடன் அதற்கான பாடத்திட்டத்தை மிகக் கவனத்துடன் உருவாக்க வேண்டிய நிலையில் இன்னும் தேவையா என்ற கேள்வியிலேயே நம் கல்வித்துறை சுழன்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மாணவர்கள் தவறான வழியில் பாலியல் சார்ந்த அரைகுறை அறிவைப் பெறுவது சிக்கலை மேலும் இறுக்குவதை யாரும் கவனத்தில் கொள்ளுவதில்லை. ஆண், பெண் இருவருமே தன் உடல் பற்றிய சரியான புரிதலைப் பெற வேண்டும். ஆண், பெண்ணுக்கிடையிலான நட்பு சமூகத்தால் வரவேற்கப்பட வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனிப் பள்ளிகள் இழுத்து மூடப்பட்டு, இரு பாலர் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும். இருவரும் சேர்ந்து பழகும் இனிய சூழலில் இயல்பான நட்பை அவர்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். அது சார்ந்த உரையாடல்களை பெற்றோரும் ஆசிரியர்களும் உருவாக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும். உடல் நலம், வலிமையான உடல், மனம் சார்ந்த பயிற்சிகளைப் பள்ளியில் கட்டாயமாக்க வேண்டும். இன்றைக்கும் விளையாட்டு பீரியடில் பாடங்களை நடத்துவதும் பெண்களுக்கு மட்டும் விளையாட்டு மறுக்கப்படுவதும் பல பள்ளிகளில் நடக்கிறது. வாய்ப்பு இருப்பின் ஆர்வமுள்ள ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையை இரு பாலருக்குமே கற்பிக்கலாம். கற்பதைக் கட்டாயமாக்கலாம்.

ஆசிரியர்களுக்கும் ஆண், பெண் குழந்தைகளைப் பால் பேதமற்றுப் பார்க்கும் அறிவைப் புகட்டுவதோடு அவர்களுடைய இயல்பான உரையாடல்களை நோய்மையோடு பார்க்கும் முட்டாள்தனத்தையும் அகற்ற வேண்டும். மாணவப் பருவத்திலேயே ஆபத்துகளை எதிர்கொள்ளத்தக்க மனரீதியான வலிமை பெறத் தக்க பாடத்திட்டங்கள் இணைக்கப்பட வேண்டும். மாணவர் வாழ்நிலை, அவர்களுடைய குடும்பச் சூழல் பற்றிய தரவுகள் அரசால் சேகரிக்கப்பட்டு, அதை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கல்வித்துறைக்கும் பாடத்திட்டக் குழுவுக்கும் அரசின் இறுக்கமான கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, சுதந்திரமான அமைப்புகளாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். கல்வித்துறைக்கு இன்னும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர் சூழல், உளவியல் சிக்கல்களுக்குத் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இப்படியான சம்பவங்கள் நடைபெறும்போது மேலோட்டமான ஆய்வுகள் செய்யப்படுவதும் நிவாரணத் தொகை அளிப்பதும் தண்டனைகள் அளிப்பதும் மட்டும் போதாது. அது புரையோடிப் போன புண்ணுக்கு மேலாகக் களிம்பு பூசுவதாகவே அமையும். அதை விடுத்து அரசு உண்மையான அக்கறையோடு, இளந்தலைமுறையிடம் அக்கறை செலுத்தும்போது மட்டுமே பெண்களைப் பற்றிக் காந்தியடிகள் கண்ட நனவாகும். இளம்பெண்ணொருத்தி நடுஇரவில் தனியாய்த் தன் வீடு திரும்பும் அளவுக்குச் சமூகம் நலமாக இருக்கும்போதுதான் ஆணும் பெண்ணும் இணைந்த ஒரு ஆரோக்கியமான, ஆதிக்கமற்ற சமூகம் உருவாகும்.








கழிப்பறை காணாத கல்விக்கூடங்கள்

நன்றி : பாவையர் மலர்

உலகிலேயே கஷ்டமான விஷயம் எது? என்று அரசவையில் ஒரு நாள் கேட்டார் மாமன்னர் அக்பர். அதற்கு, பீர்பல் சொன்ன பதில் அவருக்குப் பெருங்கோபத்தைத் தந்தது. மறுநாளுக்குள் தன் பதிலை நிரூபிக்காவிடில் பீர்பலுக்குத் தலை போகும் என்ற நிலை. மறுநாள் காலை, அக்பரை அவரது பள்ளியறையிலிருந்து அரண்மனைத் தோட்டத்துக்குச் செல்லும் வாயிற்கதவை அடைத்து விட்டார் பீர்பல். அரை மணி நேரம் கழித்துத் திறந்து விட, அதற்குள் தவித்துவிட்ட அக்பர் கதவை அடைத்தவரும் திறந்தவரும் யாரென்றும் பாராமல் மிக வேகமாக ஓடினார் தோட்டத்தை நோக்கி. சற்று நேரம் கழித்து கோபத்தோடு வந்த அக்பரிடம், வருத்தம் தெரிவித்த பீர்பல், தான் நேற்றுச் சொன்ன பதிலை நிரூபிக்கவே இப்படிச் செய்ததாகத் தெரிவித்தார். அக்பரும்  உலகிலேயே கஷ்டமான விஷயம் எது? என்பதை உணர்ந்து கொண்டார்.

நாம் அன்றாடம் பயன்படுத்தியே ஆக வேண்டிய மிகச் சிலவற்றில் கழிவறையும் ஒன்று. நம் உடலின் சுழற்சியில் இன்றியமையாப் பங்கு வகிப்பதும் உடல்நலம் காப்பதிலும் கூட உடல்கழிவுகளை அகற்றுதல் அவசியமானதொன்று. ஓர் அரசு தன் குடிமகனு/ளுக்குச் செய்து தர வேண்டிய அடிப்படை உரிமையுமாகும். ஆனால் இந்தியாவில் இருக்கும் கழிவறைகள், அது பராமரிக்கப்படும் முறை பற்றியும் அதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் நாம் விவாதிக்கத் தொடங்கினால் மார்க்ஸ், எங்கெல்ஸிடமெல்லாம் நாம் போக வேண்டியிருக்கும்.

'ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது' என்பது ஒரு பழமொழி. குழந்தைகளுக்கு அந்தப் பிரச்சனை இல்லை. அதற்கு டயாபர் எனும் சிறிய தலையணை போன்ற கோவணத்தைக் கட்டி விடுகிறார்கள். நோயுற்ற முதியோருக்கும் அதே நிலைதான். கொடுமை என்ன வெனில் கட்டப்படுகின்ற துணியைப் பல மணி நேரம் எடுத்துப் பாராமலே இருப்பதால் அதுவே நோய்களின் கூடாரமாகவும் ஆகி விடுகிறது. முன்னர் இருந்த மெல்லிய துணிகளெல்லாம் இன்று நாகரிகமற்றதாக மாறி விட்ட நிலையில் இந்தக் குட்டித் தலையணை டயாபர்களே பெரும்பான்மையாக நகரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஓடிக்கொண்டே தான் குடும்ப உறுப்பினர்களிடம் கூடப் பேச முடியுமென்ற நிலையில் இருக்கும் இந்த நவீன யுகத்தில் இவைகளைத் தோய்க்க வேண்டியதில்லை, கழற்றிக் கடாசி விடலாமென்ற ஒற்றை வசதியில் இந்த நோய்க் கூண்டு மிகப் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தத் தலையணைகளே தெருக்குப்பையில் மிகுதியாக இருப்பதும் கவலைக்குரிய விஷயம்.

நம் நாட்டில் உள்ள பள்ளி, விடுதி, பொது மருத்துவமனை, உணவகம், பொதுக் கழிப்பிடம், பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், அரசு அலுவலகம் என மக்கள் பயன்படுத்தும் இடங்கள் பலவற்றிலும் சுத்தம் என்றால் என்ன விலை என்று கேட்குமளவில்தான் கழிவறைகள் பராமரிக்கப்படுகின்றன; பயன்படுத்தவும் படுகின்றன. மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் கொடுக்கப்படும் அடிப்படைப் பயிற்சியே கழிவறை பயன்படுத்துவதும் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதும்தான். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளே பெறும் இப்பயிற்சியை, பொதுப் பள்ளிகளில் பயிலும் நல்ல மனத் திறனுடைய மாணவர்களும் கூடக் கற்றுக்கொள்ளாத காரணத்தால் தான் பள்ளிக் கழிப்பிடங்களும் ஏனைய பொதுக் கழிப்பிடங்களும் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. ஆரம்பப் பள்ளியில் பயில வேண்டியதை வாழ்நாள் முழுதுமே பயிலாமல் இருக்கின்ற காரணத்தாலேதான் நம் நாட்டின் தெருவோரங்களே கழிப்பிடங்களாக மாறிச் சுற்றுச் சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் முதுகெலும்பு என்று வருணிக்கப்படும் கிராமங்களில் இன்னமும் கழிப்பிடம் இல்லாத வீடுகளே மிகுதி. குடிசைகள் நிறைந்த சென்னை மாநகரத்திலோ எனில் ஒரு இடத்தில் கூட இலவசக் கழிப்பறை இல்லை.  அதன் விளைவாக நகரத்தெருக்களில் ஓடும் நாற்ற ஆறுகளையும், மூத்திரச் சந்துகளையும், மூலைகளில் தேங்கி நிற்கும் மலக் குட்டைகளையும் மூக்கைப் பொத்திக் கொண்டே காணலாம். அரிசி ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் மாநிலத்தில்தான் சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாயும் மலம் கழிக்க ஐந்து ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. நகரை அழகுபடுத்துவதை விட முக்கியமனது அடிப்படைச் சுகாதாரம். ஆனால் உண்மை என்னவெனில் பெருகி வரும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்பக் கழிப்பிடங்கள் கட்டத் திட்டமிடப்படவில்லை என்பதே.

இந்தச் சூழலில் வருங்காலத் தூண்களான குழந்தைகள் பள்ளிக்குச் செல்கையில் இன்னும் கொடுமையைச் சந்திக்கிறார்கள். நம் பள்ளிகளில் இன்றைக்குப் பாடம் கற்பிப்பதோடு மேற்சொன்ன விஷயத்தை அடக்கவும் கற்றுத் தருகிறார்கள்.  தமிழ்நாட்டில் 46% அரசு பள்ளிகளில் கழிவறை வசதியே கிடையாது என்கிறது குழந்தைகள் உரிமைகளும் நீங்களும் என்ற தன்னார்வக்குழுவின் கள ஆய்வு. 74% அரசு பள்ளிகளில் நீர் வசதி இல்லை; தூய்மை இல்லாத ஆரோக்கியக் கேடான நிலையில் கழிவறைகள் உள்ளன என்பதே மிகக் கசப்பான உண்மை. பல அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளன. இன்னும் பல பள்ளிகளில் குடிநீர், கழிவறை வசதி இருந்தாலும், அவை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. தங்கள் வீட்டுப் பிள்ளைகள் வெட்ட வெளியில் இயற்கை உபாதை கழிப்பதைக் காணும் பெற்றோர் மனம் ஏற்றுக் கொள்ளுமா? அதிலும் குறிப்பாக, பதின்பருவ வயதில் இருக்கும் மாணவிகளின் நிலை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியதொன்று. பெருநகரங்களான டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் மட்டும் 6-10 வயது இடைவெளியில் 25% பெண் குழந்தைகளும் 10-13 வயதில் 50% பெண் குழந்தைகளும் இந்தக் காரணத்துக்காகவும் படிப்பைப் பாதியில் கைவிடுவதாகச் சொன்னால் கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளின் நிலை என்னவாக இருக்குமென்று சிந்திக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் சற்றே தாமதமாகவேனும் விழித்துக்கொண்டு பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கழிவறைகளைக் கட்டித்தர வேண்டுமென்று கடந்த ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி உத்தரவிட்டது. அது அப்போதைய பரபரப்பாய் இருந்து பின் வழக்கமான கிணற்றுக்கல்லாய் ஆழக் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் பள்ளிக்கூட வசதிகள் தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் அடுத்த ஆறு மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று கே.எஸ். இராதாகிருஷ்ணன் தலைமையிலான பென்ச் உத்தரவிட்டுள்ளதுடன் பள்ளிகளில் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமலிருப்பது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள கட்டாய இலவசக் கல்வி என்ற ஷரத்துக்குப் புறம்பானது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

'சூழல் சுகாதாரக் கல்விக் கருவூலம்' அமைப்பின் இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ''2008-ம் வருடத்தை உலக சுகாதார ஆண்டாக ஐ.நா அறிவித்திருந்தது. இதன்மூலம் பல்வேறு நாடுகளிடமிருந்து பல கோடி ரூபாய் நமக்கு நிதியுதவி கிடைத்தது. ஆனால், மத்திய-மாநில அரசுகள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கழிப்பிடம் இல்லாததால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். உடல் ரீதியான பாதிப்புகளுடன் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் முறையான கழிப்பிடம் இல்லாததால்... மாதவிலக்கு சமயங்களில் ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்களை மாணவிகள் இழக்கிறார்கள். இது கல்வி மறுக்கப்படுவதற்கு இணையான செயல். கழிவறை இல்லையென்ற ஒரே காரணத்துக்காக தமிழ்நாட்டில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மாணவிகளின் படிப்பைப் பெற்றோர்களே நிறுத்தியிருக்கிறார்கள். இது, 'பெண் கல்வியை மேம்படுத்தவேண்டும்!' என்கிற அரசின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடுகிறது என்று கூறுகிறார். அவர் கூறியுள்ளது நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய செய்தியாகும். பள்ளிகளில் கழிவறைகள் இன்மை அல்லது முறையாகப் பராமரிக்கப்படாமை என்பது ஒரு சிக்கலாக நில்லாமல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் இயற்கை உபாதையை அடக்கிப் பழகும் பெண்கள், பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு ஆளாவதுடன் உளவியல் நிலையிலும் பாதிக்கப்படுகிறார்கள். திறந்த வெளிகளைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கூடுதலாக இன்னும் பல சிக்கல்களை, அவமானங்களை, ஆபத்துகளைச் சந்திக்கிறார்கள். இதன் காரணமாகப் பல பெண்கள் தங்கள் கல்வியை விட்டு இடையில் விலகுவதும் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மறைமலை நகர் அருகேயுள்ள அரசுப் பள்ளி ஒன்றின் மாணவிகள் இருவர், கழிவறை இல்லாததால் பக்கத்தில் இருந்த குளத்துக்குச் சென்று அதிலேயே மூழ்கி இறந்துவிட்டனர் என்ற செய்தி எத்தனை பேரின் கவனத்தை ஈர்த்திருக்கும்?

மாதவிலக்குக் காலங்களில் மாணவிகள் படும் துயரமும் சொல்ல மாளாது. நீர் வசதி இல்லாத கழிப்பிடங்களில் மாணவிகள், தங்களை எப்படித் தூய்மை செய்து கொள்ள முடியும்? தூய்மையற்ற கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டு, கருப்பை பாதிக்கப்படுவதுடன் வெள்ளைப்படுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட அது தொடர்பான பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். கழிவறை இல்லாமல் மலம், சிறுநீரை அடக்குவதன் மூலம் பல பெண்களுக்கு கர்ப்பப்பை கீழிறங்கிவிடுகிறது, சிறுநீரகக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. கழிக்க வேண்டுமென்னும் உந்துதல் தோன்றிய பின்னும் அதனை அடக்கிக் கொள்ளுதல் என்பதே அவர்களுக்கு இழைக்கப்படும் அராஜகமாகவும் பெரும் மனித உரிமை மீறலாகவும் பார்க்கப்பட வேண்டியது. தொலைதூர நோக்கில் பார்க்கும்போது, ஒரு தூய்மையற்ற கழிப்பிடம் பெண்ணின் உடல்நலம், உளநலம், கல்வி, எதிர்காலம் ஆகியவற்றைப் பாதிப்பதுடன், வருங்காலத்தலைமுறையையும் பாதிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே வகுப்பறைகள் வன்முறைக் கூடங்களாக இருக்கும் நிலையில் பள்ளிக் கழிப்பிடங்கள் அதன் சித்திரவதைக் கூடங்களாகவே இருக்கின்றன.

தமிழகத்தில் 2008 கணக்கீட்டின்படி மொத்தம் ஐம்பத்து மூன்றாயிரம் அரசுப்பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் 13,808 பள்ளிகளில் கழிப்பறை வசதியே கிடையாது. 17,000 பள்ளிகளில் பெண்களுக்கென தனி கழிப்பிட வசதி கிடையாது. ஆக சரிபாதி பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை. மீதமிருக்கும் பள்ளிகளில் கழிவறைகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் இல்லை என்றாலும் அது எப்படி பராமரிக்கப்படுகிறது என்பது நாமறிந்ததே. இன்றைக்கு இது மேலும் கூடியிருக்கும். ஆனால் பள்ளிகள் மட்டும் தான் கூடுகிறது; தரம் உயர்த்தப்படுகிறதேயன்றி அதற்ற்கேற்றாற்போன்ற வசதிகள் செய்து தரப்படுவதில்லை. 1660 பள்ளிகளில் குடிநீர் வசதி கிடையாது மற்றும் சற்றேறக்குறைய 13,000 பள்ளிகளுக்கு மின்சார வசதி கிடையாது என்பன கூடுதல் தகவல்கள்.

ஊனமுற்றோருக்கென சிறப்புக் கழிப்பறைகள் தமிழ்நாட்டின் பொது இடங்களில் ஒன்றிரண்டு இருந்தாலே அதிகம் எனும் நிலையில் ஊனமுற்ற மாணவர்கள் பள்ளியில் படும் பாட்டைச் சற்றே நினைத்து பார்க்க வேண்டும். தமிழக அரசின் ஊனமுற்றோர் நலவாரியமே மூன்றாவது மாடியில்தான் செயல்படுகிறது என்பதே அரசின் அக்கறையைக் காட்டி நிற்கும். போதுமான எண்ணிக்கையில் கழிப்பிடங்கள் இருப்பதும் அதன் பராமரிப்பு முறையாக இருப்பதும் நிச்சயம் மக்களுக்கு பொறுப்புணர்வைத் தரும். அதன் மூலம் மக்கள் இதுபோன்ற இடங்களை வீணாக்கிவிடுவார்கள் என்ற எண்ணத்தை மாற்றலாம்.

புதுவை அரியாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய கழிவறை வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இது குறித்து புதிய வேள்வி நல்வாழ்வு சங்க தலைவர் ரஞ்சித்குமார் அரியாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் 600 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கழிப்பிடம் ஒன்று மட்டுமே உள்ளது. மாணவர்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் கூடுதல் கழிவறைகள் கட்டித்தர வேண்டும் என்று கூறுகிறார்.

பள்ளிகளில் கழிவறைகளைக் கட்டுவித்து மாணவர்கள் அதைப் பயன்படுத்துவதன்மூலம் சுகாதாரம் குறித்து ஆசிரியர் கற்பிக்கும் செய்திகள் பெற்றோரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. எனவே முழுச் சுகாதாரத்திட்டத்தின் முக்கியமான அம்சமாக பள்ளிச் சுகாதாரத் திட்டம் அமைகிறது. ஆனால் பள்ளிக் கழிவறைகள் மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தக இல்லை என்பதும் அவற்றிலும் பல மாணவர்களின் பயன்பாட்டிற்கே விடப்படாமல் பூட்டியே வைக்கப்படுவதும் சில பள்ளிகளில் நேர்கிறது. இடைவேளைகளில், உணவு வேளைகளில் ஒரே நேரத்தில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் இருக்கும் ஓரிரண்டு கழிவறைகளைப் பயன்படுத்துவதும் ஒரு சிக்கலே. மாணவர் விரும்பும் நேரத்தில் கழிவறையைப் பயன்படுத்த அனுமதிப்பதே இதற்குத் தீர்வாகும். இதனை ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டுமேயன்றி, மாணவர் தன்னை ஏய்க்கும் உத்தியாகவோ அல்லது வகுப்பறையின் ஒழுங்கு குலைவதாகவோ நினைத்துத் தன் அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்த நினைத்தல் சரியல்ல.

சார்''
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.

சார்''
உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.

நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்

வகுப்பு முழுதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்

எனும் பழ. புகழேந்தியின் கவிதை பல செய்திகளைச் சொல்லாமல் சொல்கிறது.

பெரும்பாலும் காலில் செருப்பில்லாத கிராமத்துக் குழந்தைகள் இந்தச் சூழலை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று ஒரு மாணவனைக் கேட்கையில், எங்கள் கால்களை ஈரப்படுத்திக் கொண்டு, இயற்கை அழைப்பினை செயற்கையாக எவ்வளவு வேகமாகப் பண்ண முடியுமோ அப்படி முடித்துக் கொண்டு வெளியே வந்து மணலில் காலைப் புரட்டி எடுப்போம். கையினை டிராயரில் உள்ளே தடவிக் கொள்வோம் என்று கூறுவதைக் கேட்கையில் மனத்தில் வேதனை மண்டுகிறது. ஆனால் பள்ளியில் கட்டப்பட்டிருக்கும் கழிப்பிடங்களைத் தூய்மையாக வைக்கும் முயற்சியின் மற்றொரு கோணத்தையும் பார்க்க வேண்டும். கழிப்பிடத் தூய்மை என்பது பள்ளி நிர்வாகம் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. பொதுவாக, கிராமங்களில் இன்றைக்கும் பெரும்பான்மை வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாத நிலையில், பள்ளியில் இருக்கும் கழிப்பிடங்களைச் சரியான முறையில் பயன்படுத்தும் அறிவினைப் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள்.

என் பள்ளியில் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தூய்மையான, நீர் வசதியோடு கூடிய கழிப்பிடங்களை ஏற்ற்படுத்திய பிறகும் கூட அவற்றைச் சரியாகப் பயன்படுத்தாத காரணத்தால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. வசதியைச் சரிவரப் பயன்படுத்தாமை, உபயோகித்த நாப்கின்களை அங்கேயே சுத்தப்படுத்தாமல் வீசுதல், சுற்றிச் சிதறடித்தல், அதனால் அடைப்பு ஏற்படுதல் போன்றவை இன்னும் தலைவலியை உண்டாக்கின. வாரம் ஒரு முறை சுத்தப்படுத்துவதற்காக ஏற்ற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிலாளிக்கும் இது மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தியதுடன் இதுவும் ஒரு வகை மனித உரிமை மீறலாகவே எனக்குத் தோன்றியது. நம் கவனக்குறைவால் அல்லது அலட்சியத்தால் நம்மைப் போன்ற இன்னொரு மனிதனை அடைப்புகளை நீக்கச் சொல்வதும் சரியான செயலாக எனக்குப் படவில்லை. என்றாலும் மேலும் இரண்டு முறை சுத்தப்படுத்தியும் அலட்சியப் போக்கே தொடர்ந்தது. கண்காணிக்க மாணவியர் குழு ஒன்றை ஏற்படுத்தினோம். அதுவும் கூடத் தோல்வியிலேயே முடிந்தது. மீண்டும் மீண்டும் மாணவியரைக் கூட்டிப் பேசிப் பார்த்தும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் செய்த போதும் கூட மிகக் குறைந்த பலனே கிடைத்தது. இறுதியில் தூய்மை செய்ய வந்த தொழிலாளி நண்பர் கோபித்துக் கொண்டு நின்றவுடன் வேறு எவரும் கிடைக்காத நிலையில் பள்ளிக் கழிவறை மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்று முன்பிருந்த நிலையை விடவும் இன்னும் மோசமானது.

ஒரு தலித் தொழிலாளர்தான் கழிப்பிடத்தைத் தூய்மை செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. மாணவிகளே தத்தமக்குள் குழு அமைத்துத் தூய்மை செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தபோது பெற்றோரிடமிருந்து கடுமையான எதிர்ப்பினைச் சந்திக்க நேர்ந்ததன் விளைவு, மீண்டும் மாணவிகள் பள்ளிச் சுவரோரங்களைத் தேடிச் செல்லும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. ஆனால் பள்ளியில் உள்ள பசுமை மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் படை, தேசிய மாணவர் படை, சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவற்றை இன்னும் செம்மையாக இது விஷயத்தில் பயன்படுத்த முடியுமா என்பதும் ஆராயத்தக்கதாகும். தேசத்தந்தை காந்தி இந்தச் சூழ்நிலையில் என்ன செய்திருப்பார்? அவரே ஒரு துடைப்பம், வாளியுடன் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் பணியில் இறங்கியிருப்பார். அவர்ருடன் அவரது தொண்டர்களும் மாணவர்களும் கூட இறங்கியிருப்பர். ஆனால் இப்போது மாணவர்களை இதில் ஈடுபடுத்தினால் எதிர்ப்புகள் கிளம்பும். குழந்தைகளைப் படிக்க அனுப்புகிறோமா அல்லது கழிவறையைக் கழுவ அனுப்புகிறோமா என்று பெற்றோர்கள் கூச்சல் எழுப்புவர். அத்தகைய பெற்றோரிடம் இதுவும் ஒரு பாடம்தான் என்று திருப்பிச் சொல்லும் வலிமை இன்றைய ஆசிரியர்களிடமோ அரசிடமோ இல்லை என்பதுதான் நமது பலவீனம் என்னும் தினமணி 05-07-2011 நாளிட்ட தலையங்கக் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான பள்ளிக் கழிப்பிடங்கள் ஒரு நீண்ட மேடை போன்று பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்வது போன்றே அமைக்கப்படுகிறது. ஓரிரு அறைகள், அதுவும் மின் இணைப்பு இன்றியே கட்டப்படுகின்றன. 1000 முதல் 4000 மாணவ - மாணவிகள் வரை படிக்கும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இந்த ஓரிரு கழிப்பறைகள் போதுமானதாக இல்லை. நீரற்ற இத்தகைய கழிப்பிடங்கள் பன்றிகளின் தங்குமிடமாக மாறி மேலும் நோய்களையே பரப்புவதாக அமைகிறது. மாணவர்கள் சிறுபிள்ளைத்தனமாகக் குழாய்களையும் கதவுகளையும் உடைத்தல், வழியெல்லாம் அசுத்தம் செய்தல் என மேலும் சீரழிவுகளை நிகழ்த்துகின்றனர். தாம் செய்வது இன்னதென்றும் அதன் விளைவுகளை அறியாமலும் செய்கின்ற இத்தகைய காரியங்களால் நிலைமை மேலும் இறுக்கமடைகிறது.

மற்றொரு பள்ளியில் நேர்ந்த அனுபவத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். இத்தகைய கழிப்பிடங்கள் திறந்தவெளியாக, மேற்கூரை இன்றியே அமைக்கப்படுகின்றன. இங்கு மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பிடங்களின் மீது மாணவர்கள் ஏறி நின்று பார்ப்பதாக மாணவ்கள் குற்றம் சாட்டியபோதுதான் இதற்குள் இருக்கும் மேலும் பல சிக்கல்களை உணர முடிந்தது. பதின் பருவப் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் மேற்கூரை மூடப்பட்ட நிலையில், கதவுகளுடனும் நீர் வசதி, மின் இணைப்பு, மற்றும் காற்றோட்டத்துடனும் நல்ல கால்வாய் வசதியுடனும் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். திருப்பூர் ஜெய்வாபாய் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பயன்படுத்திய நாப்கிங்களை எரிப்பதற்ற்கென்றே இயந்திரம் ஒன்றை நிறுவியிருப்பதாக ஒரு நாளிதழ்ச் செய்தி படித்த நினைவு. இதைப் பின்பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடு நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்த வசதியைச் செய்து விட்டால் முன்னர் சொன்ன அடைப்புகள் ஏற்படுத்தல் போன்ற சிக்கல்களைத் தீர்த்து விடலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் இன்று அரசு கழிவறை கட்ட நிதி உதவி செய்து வருகிறது. இந்தத் திட்டத்தை இன்னும் வேகமாகவும் சீரிய முறையில் ஊழலுக்கு இடமளிக்காத வகையில் செய்து முடிக்கும்போது மாணவ மாணவியர் பள்ளியிலும் சரியான முறையில் பயன்படுத்தக் கற்றுக் கொள்வர். வளரும் இளம் குழந்தைகளுக்குக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தக் கற்பித்தல் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். மூன்று வயதிலேயே குழந்தை தனித்துத் தன்னைச் சுத்தம் செய்து கொள்ளக் கற்றுக் கொள்வது சாலச் சிறந்ததாகும். விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையைக் கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப் பண்பினை வளர்த்துக் கொள்ளும், பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாகத் தன்னை உருவாக்கிக் கொள்ளும்.  இந்தத் தொட்டில் பழக்கமே சுத்தமான வழக்கமாகக் கடைசி வரையிலும் அவர்களைப் பின்பற்றி நிற்கும். இல்லாவிட்டால் ஐந்திலும் வளையாது; பின்பு ஐம்பதிலும் வளைக்க முடியாது.

நம் நாட்டின் குழந்தைகளே நாளைய வலிமையான இந்தியாவின் தூண்கள். அந்தத் தூண்கள் உடல்நலம் கெட்டு உளுத்துப் போகாமல் உண்மையான வலிமையோடு திகழ தூய்மையான கழிப்பிடங்களும், சுற்றுச் சூழலும் நல்லறிவும் அவர்களுக்குத் தேவை. அதைப் பூர்த்தி செய்ய வேண்டியது மாநில, நடுவணரசுகளின் கடமையுமாகும். அடிப்படையான உரிமைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுள் அடங்கும் கழிப்பிடம் ஆகிய வசதிகளைச் செய்து தராத கீழ்மையானதொரு அரசாங்கத்தை வருங்காலத் தலைமுறை மன்னிக்காது. உழைத்துப் பெற வேண்டிய பொருட்களையெல்லாம் இலவசமாகக் கொடுக்கும் அரசு, இலவசமாகக் கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளை வசதி படைத்தோருக்கு மட்டுமானதாக வைத்திருக்கிறது. மகாராஷ்டிராவில் சுத்தம், சுகாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ள சுகாதாரத் துறை, உயர் மற்றும் தொழிற்கல்வித் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.  இதன் எதிரொலியாக சில தினங்களுக்கு முன் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் வீட்டில் கழிவறை இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு கல்லூரிகளில் சீட் கிடையாது என்று மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அக்டோபர் 15 உலகக் கைகழுவும் தினமென்றும் நவம்பர் 19 உலகக் கழிவறைத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் இவற்றுக்கெல்லாமும் ஒரு நாளை ஒதுக்கிக் கொண்டாடுவதே இதன் முதன்மைத்துவத்தை நமக்கு விளக்கும். எனவே நமது அரசும் மாணவர் நலனில் உண்மையான கவனத்தைச் செலுத்தி, தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்கித் தர வேண்டும். ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் உத்தரவிட்டபிறகே தன் நீள்துயிலைக் களைவதென்று இராமல் வருங்கால சமுதாயம் ஆரோக்கியமான சமுதாயமாக உருவாகத் தேவையானவற்றைச் செய்ய முன்முயற்சி எடுக்க வேண்டும்.


மாணவர்களை,

விடை சொல்லவே
பழக்குகிறோம்.

பழக்கியதே இல்லை
கேள்வி கேட்க.

கல்வி பெறுவதே கேள்வி கேட்கவும் புதிய விடைகளை உருவாக்கவும் வகை செய்யும். அந்தக் கல்வியையே கேள்விக்குறியாக்கும் கழிவறைப் பிரச்சனையை மிக முக்கியமானதாகக் கவனத்திலெடுத்துக் கொண்டு போர்க்கால நடவடிக்கைகளைத் துவங்குவதே அரசு செய்ய வேண்டியதாகும்.

Monday, May 13, 2013

திருதராஷ்டிர ஆசிரியர்கள்

நன்றி: பாவையர் மலர்


குடி உயரக் கோன் உயர்வானென்பது ஒளவையின் வாக்கு. ஆனால் கோமான்களின் உயர்வே முதன்மையாகக் கருதப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடிகளின் நலன் பிரதானப்படுத்தப்படாமல் ஆட்சியாளர்களின் எண்ணங்களே கோலோச்சும் நிலையில் மிகப்பாடுகள்படும் துயர்நிலையில் முதன்மையாய் இருக்கிறது கல்வித்துறை. அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் தனியார்களுக்குக் கைமாற்றப்பட்ட பின்னர், பணம் பண்ணும் தொழிற்பள்ளிகளென மாற்றம் பெற்றன. கடந்த சில ஆண்டுகளாக இதில் நடந்த தில்லுமுல்லுகள் ஏராளம். ஆசிரியர் பயிற்சிக்குத் தேவையான மதிப்பெண்ணைப் பெறாதவர்களும் பணம் கொடுத்தால் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்; பயிற்சி பெறாமலும் வகுப்புக்கே வராமலும் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்; பணம் கொடுத்தவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான சகலவிதமான வழிகளையும் அந்தந்த பயிற்சி நிறுவனங்களே பார்த்துக்கொண்டன.

அண்மையில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் இதன் விளைவுகள் வெட்டவெளிச்சமாகி சந்தி சிரித்தது. யாரும் கவனியாமல் இருந்த ஒரு சீர்கேட்டின் விளைவை அன்று நாம் நிதர்சனமாய் உணர்ந்து கொண்டோம்.

 6.72 இலட்சம் பேர் எழுதிய ஒரு தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மாணவர்களைத் தேர்ச்சி பெற வேண்டிய ஆசிரியர் பெருமக்களே தோல்வியுற்று தலை குனிந்து நிற்கின்றனர்.





 ------------------------------------------------------------------------------------------------------------     
முதல் தாள்                                                        இரண்டாம் தாள்

ஒரு இலக்க மதிப்பெண்      : 75                   ஒரு இலக்க மதிப்பெண்       : 116
4 முதல் 9 மதிப்பெண்            : 23                   4 முதல் 9 மதிப்பெண்          :    40
3 மதிப்பெண்                              : 52                   3 மதிப்பெண்                      :         76
------------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியர் பயிற்சி பெற்று தகுதித்தேர்வை எழுதுகின்ற லட்சக்கணக்கானோர் தோல்வியுறுவதும் இத்தனை இழிவான மதிப்பெண் பெறுவதும் எதைக் காட்டுகிறது? இதற்கு நேரமின்மையை ஒரு காரணமாகச் சுட்டுகின்றனரென்றாலும் கூட அதை நம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தகையோர் ஆசிரியர் தகுதித் தேர்வை மீண்டும் எழுதி, தகுதி பெற்று எப்படி ஒரு வலிமையான இளைய சமுதாயத்தை உருவாக்க முடியும்? ஓட்டுநரை நம்பிச் சில மணி நேரங்கள் ஏதோ ஒரு வாகனத்தில் பயணிக்கும்போது கூட மிகக் கவனமாகப் பயணிக்கும், ஓட்டுநரைக் கண்காணிக்கும் நாம், நம் குழந்தைகளை நம்பி ஒப்படைக்கும் ஆசிரியரைப் பற்றி எப்போதாவது சிந்திக்கிறோமா? அவரைச் சந்திக்கவாவது முயற்சிக்கிறோமா? ஒரு குழந்தையின் மன அமைப்பை உருவாக்கும் வலிமை பெற்றவர்களில் பெற்றோர்க்கு அடுத்த நிலையில் ஆசிரியர் இருப்பதனால்தான் அவரை மாதா பிதா குரு தெய்வம் என்று வணங்குகிறோம். இறைவனுக்கு முன்னர் ஆசிரியரை வைத்துப் போற்றிய சமூகம்தான் இன்று இழிவான ஆசிரியர்களைச் சந்திக்கிறது; எல்லா ஆசிரியர்களையும் இழிவுபடுத்தவும் செய்கிறது. இரண்டுமே தவறல்லவா? 

கட்டுமானங்களிலும் வெளிப்பூச்சுகளிலும் கவனம் செலுத்தும் அரசும் சமூகமும் கல்விசார் உள்ளீடுகளில் அக்கறை செலுத்தவில்லையென்பதே இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். அது ஆரம்பக்கல்வியிலிருந்து ஆசிரியர் கல்வி வரையிலும் வேரோடிப் புரையோடிப் போயிருக்கிறது. இதற்கு முன்னரும் கூட சில கட்டுரைகளில் நான் சொல்லியிருக்கலாம். எத்தனை முறை நான் சொன்னாலும் வருத்தமும் சினமும் அடங்காத விஷயமிது. இன்றைய தலைமுறைத் தமிழ்க் குழந்தைகள் பெரும்பான்மையில் தன் தாய்மொழியைப் பிழையின்றி எழுதுவதில் பெரும் சிக்கலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது; பேசவும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதில் சாதி, வர்க்க, பால் பேதமேயில்லை. முன்னர் மிகுந்த கவனத்துடன் பிழைகளைக் கவனித்துத் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் இன்றைக்கு மாணவன் நலன் கருதி என்னும் அடைமொழியுடன் கருத்து இருந்தாலே மதிப்பெண் கொடுக்கலாமென்ற மாற்றத்தைப் பெற்றுவிட்டது. இதற்கு மொழித்தாள்களும் விதிவிலக்கல்ல. ஒற்றை வார்த்தை விடைகளைக் கொண்டே ஒரு மாணவன்/மாணவி தேர்ச்சி பெற்று விடும்படியாக நம் வினாத்தாட்களும் மாற்றப்பட்டன. இதுவும் மாணவன் நலன் கருதியே.

ஒரு வாக்கியத்தை உருவாக்கவே கற்றுக்கொள்ளாமல், தன் கருத்தைக் கோவையாய் வெளிப்படுத்தத் தெரியாமல் வினாவுக்கு உரிய விடையைப் புரிந்து கொண்டு எழுதத்தெரியாமல் சீர்கெட்டிருக்கும் மாணவனிடமிருந்தே அடுத்த தலைமுறை ஆசிரியன் உருவாகிறான். அங்கும் எந்த மாற்றமுமில்லை. தேர்வின் சந்துபொந்துகளில், இடைவெளிகளில் தப்பி வெளியேறி ஆசிரியராகும் ஒருவரிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?

பல நாட்களாக நடந்து கொண்டிருந்த இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை, அரசு நடத்திய தகுதித் தேர்வுகள் வெளிச்சமிட்டு விட்டன.  தான்தோன்றித்தனமாக, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த, கண்காணிக்கத் தவறிய அரசு விதைத்ததை அறுவடை செய்து கொண்டிருக்கிறது. ஆனால், இதன் பலன்களை வழக்கம்போல் எந்தப் பாவமும் அறியாத குழந்தைகளே அனுபவிப்பதுடன், இத்தகைய திருதராஷ்டிர ஆசிரியர்களை நம்பித் தங்கள் கண்களையும் கட்டிக்கொண்டு காந்தாரிகளென அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய தலைமுறையின் சீர்கேட்டிற்குப் பல்வேறு காரணிகள் இருப்பினும் ஆசிரியர் அதில் மிக மிக முக்கியமானவர். தன் செயலுக்குப் பொறுப்பேற்றே தீர வேண்டியவர். 

சமூகத்தில் பல்வேறு தொழிலாளர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆசிரியரையும் மருத்துவரையுமே தெய்வமென்று கொண்டாடுகிறது சமூகம். அதிலும் ஆசிரியருக்கென்றே ஒரு நாளை ஒதுக்கி 'ஆசிரியர் தினம்' என்று பெயரிட்டு மரியாதை செய்கிறது. உயிர் காக்கும் மருத்துவருக்குக் கூடக்கிடைக்காத அரும்பேறு இது. தனக்கு உடல்நிலை சரியில்லாதபோது நோய்நாடி நோய்முதல் நாடிய மருத்துவனைப்போய்த் திரும்பிப்போய் எவரும் பார்ப்பதில்லை. ஆனால் தான் படித்த பள்ளி, தனக்குக் கற்பித்த ஆசிரியர் என்று மனத்திலே பதித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் சென்று சந்திக்கப்படுபவர் ஆசிரியர் மட்டுமே. எனவேதான் அந்த அரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டோர் தவறும்போது அதிகபட்ச சினத்தோடு கொதித்துமெழுகிற்து. சிறு தவறுக்கும் பெரும் தண்டனையை கோருகிற்து. ஆசிரியர் சமுதாயம், தமக்கிருக்கும் மதிப்பையெண்ணிப் பெருமையடைவதோடு அதில் மறைந்திருக்கும் பொறுப்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.