அந்த முக்கியமான தெருவின் நடுவில்
இருக்கிறது அவ்வீடு
சுற்றிலும் பூஞ்சோலை
சுத்தமான நடைபாதை என
எப்போதும் ஈர்க்கும் அதன் அமைதி
நான் சுற்றியலைந்த இல்லம்
மூதாதையரின் மூச்சுக் காற்றால்
சூழப்பட்டிருக்கிறது
நேராக நுழைந்தவுடனே
கண்ணில் படும் வரவேற்பறை
வரவேற்பின் இனிமை
இருக்கைகளில் அமர்ந்திருக்கும்
இன்னும் உள்ளே சென்று
இடது பக்கம் திரும்ப
கண்ணில் படும் படுக்கையறை
மென்மை, அதன் வாசம்
எல்லாம் அங்கே படுத்திருக்கும்
வெளியில் வந்து மீண்டும் நேராய்ச் சென்றால்
இடப்பக்கம் உணவறை
வலப்பக்கம் பூசையறை
இறுதியாக
உணவறையை ஒட்டியிருக்கும்
சமையலறை
உணவறையில் உணவுகளின்
சிறப்பு (அ) குறை சொல்லும்
வார்த்தைகள் இறைந்து கிடக்கின்றன
சமையலறையில் பாத்திரம் தேய்த்தே
தேய்ந்து போன விரல் பதிவுகள்
பூசையறையில் குங்குமமும் மஞ்சளும் சந்தனமும்
இட்டு இட்டு அறுந்து போன
கட்டை விரல்கள் தொங்கிக்கொண்டுசமையலறை எங்கும்
உஷ்ண மூச்சுக்காற்று
மெல்லிய மரணத்தின் சாயல்
கண்ணீர்க்கறை படிந்த சுவர்கள்
மாதவிலக்கு, பால் கணக்கு எனப்
பெண்களின் கரிசல் இலக்கியம்
இது வரை இருந்த வீட்டின் புதுமை உதிர
உறுத்தும் பழமையின் சுவடுகள்
அதன் எச்சம், நிகழ்
வலியும் வேதனையுமே
No comments:
Post a Comment